2015-11-16 15:52:00

கடந்தகாலப் பிரிவினைகளுக்காக மன்னிப்புக் கேட்போம்


நவ.16,2015. ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்க்கு இக்காலத்தில் ஒன்றிணைந்து பணியாற்றும் கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும், கடந்த காலப் பிரிவினைகளுக்காக ஒருவர் ஒருவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இஞ்ஞாயிறு மாலை வழிபாட்டில் கலந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூத்தரன் சபையின் பல உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிய பின்னர் உரையாற்றிய போது நம் வாழ்விலும், திருப்பணிகளிலும் ஏழைகளுக்குத் தொண்டு புரிவது மையமாக அமைய வேண்டும் என்று கூறினார்.

இயேசு அன்போடு நம் அனைவரையும் வழிநடத்துவது பற்றிப் பேசிய திருத்தந்தை, கடந்த காலத்தில் கத்தோலிக்கரும், லூத்தரன் சபையினரும் ஒருவர் ஒருவருக்கு எதிராக நடத்திய அடக்குமுறைகளை நினைவுகூர்ந்து, அதற்காக ஒருவர் ஒருவரிடம் மன்னிப்புக் கேட்போம் என்று கூறினார்.

நம்மைப் பிளவுபடுத்துவது எது என்பதில் கவனம் செலுத்தாமல், தேவையில் இருப்போர்க்கு ஆற்றும் பணியில் நம் வேறுபாடுகளில் இணக்கம் காண்பதற்கும், நாம் ஒன்றிணைந்து நடப்பதற்கும் நம் ஆண்டவரின் உதவியைக் கேட்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தம் ஏற்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவ சபை ஆலயத்திற்கு இஞ்ஞாயிறு மாலை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 2010ம் ஆண்டு மார்ச்சில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 1983ம் ஆண்டு டிசம்பரில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் ஆகிய இருவரும் இவ்வாலயம் சென்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.