2015-11-14 15:01:00

பாரிஸ் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட முடியாதவை,திருத்தந்தை


நவ.14,2015. பாரிசில் இவ்வெள்ளி இரவு இடம்பெற்றுள்ள தாக்குதல்கள் தனக்கு மிகவும் மனவேதனை அளிப்பதாகவும், இவை மனிதர்களால் நடத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்றும், இதனால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதைச் சுற்றிலும் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ள தற்கொலைப் படை தாக்குதல்கள் குறித்து Sat2000 என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இதில் பலியானவர்களின் குடும்பங்களுடன் தான் மிக அருகில் இருக்கிறேன், பலியானவர்களுக்காகச் செபிக்கிறேன் என்றும் கூறிய திருத்தந்தை, மூன்றாம் உலகப் போரில் ஒரு துண்டு என்று இதனைச் சொல்லலாம், இதை மதத்தாலும்,  எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இத்தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இத்தாக்குதல்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார் என்றும், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறை இரக்கத்தை இறைஞ்சுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள திருத்தந்தை, அனைவரும் அமைதியிலும் ஒருமைப்பாட்டுணர்விலும் வாழுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இத்தாக்குதல்களில் குறைந்தது 120 பேர் பலியாகினர், 200 பேர் காயமடைந்தனர், மற்றும் 80 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 

பாரிசின் வடக்கில் உள்ள கால்பந்து விளையாட்டுத் திடலில் பிரான்ஸ்-ஜெர்மன் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அத்திடலுக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. கால்பந்து நிகழ்ச்சியைக் காண அத்திடலில் பிரான்ஸ் அரசுத்தலைவர் பிரான்ஸ்வா ஒலாந் அவர்களும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.