2015-11-14 15:31:00

பாரிஸ் தாக்குதல்களுக்கு இந்தியத் திருஅவை கண்டனம்


நவ.14,2015. மேலும், பாரிசில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் பேராயர் கர்தினால் André Vingt-Trois, என பல தலைவர்கள் தங்களின் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் நடைபெற்றுவரும் இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டில் பங்கேற்றுவரும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இப்பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு இந்திய மக்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டின் ஒரு நிகழ்வாக, இச்சனிக்கிழமையன்று மும்பையிலுள்ள வேளாங்கண்ணி அன்னை மரியா திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் அனைவரும், இக்கருத்துக்காகச் செபிக்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

மேலும், கடந்த சனவரியில் பிரான்சிலும், இவ்வாரத்தில் பெய்ரூட்டிலும், கடந்த மாதங்களில் நைஜீரியா, பிற ஆப்ரிக்க நாடுகள் உட்பட உலகின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் தற்போது பிரான்ஸ் நாடு, தீவிரவாதக் குழுக்களால் தாக்கப்பட்டு கடும் வேதனையை அனுபவிக்கின்றது என்று பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்கள் கூறியுள்ளார்.

அச்சுறுத்தல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ளும் பிரான்ஸ் காவல்துறை மற்றும் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அனைவரோடும் ஒன்றித்து அமைதியில் வாழுமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ள கர்தினால் Vingt-Trois அவர்கள், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிப்போம் என்றும் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று பாரிஸ் நோத்ரு தாம் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும், இவ்விரு நாள்களை துக்க நாள்களாகவும், செபத்திலும் செலவழிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் Vingt-Trois.

மேலும், ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Reinhard Marx, ஜெர்மன் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைத் தலைவர் முனைவர் Heinrich Bedford-Strohm, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் உட்பட பல தலைவர்கள் பாரிசில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்களுக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, பாரிஸ் தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ஜிகாதிகள், ட்விட்டர் தளத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.