2015-11-14 15:56:00

தென் சூடான் சமயத் தலைவர்கள் உலகினரின் உதவிக்கு விண்ணப்பம்


நவ.14,2015. தென் சூடானில் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லி, அந்நாட்டிற்கு உலக சமுதாயத்தின் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர், தென் சூடான் சமயத் தலைவர்கள்.

தென் சூடானின் Mundri பகுதியில் இடம்பெறும் கடும் சண்டையினால் புலம்பெயரும் மக்கள் சார்பாக இவ்விண்ணப்பத்தை உலக சமுதாயத்திடம் முன்வைப்பதாக, அந்நாட்டின் கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபை மற்றும் இஸ்லாம் மதங்களின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ளது, கடந்த இரு மாதங்களில் எண்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள் கட்டாயமாக வெளியேறி காடுகளிலும் புதர்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, இறந்து கொண்டிருக்கும் மக்கள் சார்பாக, குறிப்பாக, சிறார், வயதானவர்கள் சார்பாக இவ்வாறு கேட்பதாகத் தெரிவிக்கின்றது.

Mundri பகுதியில் மறைப்பணியாற்றும் அருள்பணி டேவிட் குழந்தைசாமி அவர்கள் கூறுகையில், மக்கள் விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.      

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.