2015-11-14 16:07:00

தட்டம்மை இறப்புகள் 79 விழுக்காடு குறைந்துள்ளது


நவ.14,2015. உலகில் தட்டம்மை தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை, இந்நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து 79 விழுக்காடு குறைந்துள்ளது, ஆயினும், தட்டம்மையை முற்றிலும் ஒழிப்பதற்குரிய மைல்கல்லைத் தொடுவதற்கான இலக்குகள் 2015ம் ஆண்டில்  பாதை மாறுகின்றன என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து, ஒரு கோடியே 71 இலட்சம் பேர், தட்டம்மையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றுரைக்கும் WHO நிறுவனம், இத்தொற்று நோய்க்கு எதிராக போடப்பட்ட தடுப்பூசிகளே, இந்நோய் குறைப்புக்கு உதவியுள்ளன என்றும் கூறியது.

தடுப்பூசிகளால், சிறார் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.

2000மாம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் வழங்கப்படும் தடுப்பூசிகள் 72 விழுக்காட்டிலிருந்து 85 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், கடந்த நான்காண்டுகளில் இந்நிலை தொடர்கின்றது என்றும் WHO நிறுவனத்தின் தடுப்பூசிப் பிரிவின் தலைவர் மருத்துவர் Jean-Marie Okwo-Bele அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.