2015-11-14 14:57:00

கடுகு சிறுத்தாலும் – உலக முடிவுக்கு முன்பதிவு செய்யுங்கள்...


எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில் காணப்பட்ட விளம்பர வரிகள் இதோ:

"2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அக்கடிதத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

2000மாம் ஆண்டு நெருங்கியபோது, உலக முடிவுபற்றிய பல வதந்திகள் உலவி வந்தன. இந்த வதந்திகளை மூலதனமாக்கி, வர்த்தக உலகம் இலாபம் தேட முயற்சிகள் மேற்கொண்டது; ஓரளவு வெற்றியும் கண்டது.

வர்த்தக உலகினரின் எண்ண ஓட்டம் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் எண்ணுகின்றனரா? அல்லது, 'உலக முடிவு' என்பதை, ஒரு விளையாட்டாக மாற்றி, வேடிக்கை செய்கின்றனரா என்பது தெளிவில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவேயானாலும் சரி... அதை, பணத்தின் கண்ணோட்டத்தில் காண்பது, அவர்கள் கொண்டுள்ள தீர்க்கமான எண்ண ஓட்டங்களைச் சொல்கிறது.

வர்த்தக உலகம் காட்டும் ஆர்வம், உறுதி, தீர்மானம், ஆகியவை, ஆன்மீக உலகத்தைச் சார்ந்தவர்களிடம் உள்ளனவா? நம்மைச் சிந்திக்கத் தூண்டும் கேள்வி இது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.