2015-11-13 15:50:00

திருத்தந்தை : இறைவனே என்றென்றும் மாறாத அழகு


நவ.13,2015. இறைவனே முடிவில்லாத அழகு, ஆயினும், மனித சமுதாயம், இவ்வுலகப்  பொருள்களுக்கு முடிவு உண்டு என்ற சிந்தனையின்றி, அவற்றைத் தெய்வமாக வணங்கும் சோதனைக்கு சிலவேளைகளில் உட்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கானிலுள்ள சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளைய திருப்பலி வாசகங்களில் சொல்லப்பட்டுள்ள சிலைவழிபாடு  பற்றிய சிந்தனைகளை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.

விண்ணகம், இறைவனின் அழகை வெளிப்படுத்துகின்றது, அது படைப்பின் அழகு பற்றிப் பேசுகின்றது என்ற பகுதியைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த அழகான பொருள்களையும் கடந்து மேலானவற்றைப் பார்ப்பதற்கு மக்கள் இயலாமல் இருக்கும் தவறையும் சுட்டிக்காட்டினார்.

இறைவன் உருவாக்கிய படைப்பின் அழகையும் கடந்து, அவரின் எல்லையற்ற அழகை ஊருவிப் பார்க்காமல் இருப்பது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்வுலகப் பொருள்கள் மறையும், கதிரவன் அதன் அழகைக் கொண்டுள்ளது, ஆயினும், கதிரவனும் மறையும் என்பதை நாம் மறந்து விடுகிறோம் என்றும் கூறினார்.

மற்றொரு வகையான சிலைவழிபாடு பற்றி இயேசு பேசுவதை விளக்கிய திருத்தந்தை, நோவா அல்லது சோதோம் காலங்களில், வெள்ளம், மழை அல்லது நெருப்பு வரும் வரை, மனிதர் ஒருவர் ஒருவரைப் பற்றி கவலைப்படாமல், உண்டு குடித்து மகிழ்ந்தனர், ஒருவரின் மனைவியை அல்லது கணவரை அடுத்தவர் எடுத்துக் கொண்டனர் என்று கூறினார்.

அனைத்துப் படைப்புகளின் முடிவையும் கடந்து நிற்கும் இறைவனை, நாம் எப்பொழுதும் நோக்க வேண்டும், திருவழிபாட்டு ஆண்டு நிறைவடையவிருக்கும் இந்நாள்களில் இதையே திருஅவை நமக்குப் போதிக்கின்றது என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.