2015-11-13 17:00:00

சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்பட மோடி அரசுக்கு அழைப்பு


நவ.13,2015. இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமாறு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசுக்கு விண்ணப்பித்துள்ளது, ஓர் அனைத்துலக மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு.

இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், பிரிட்டனில் இவ்வியாழனன்று மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும்வேளை, சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக குரல் கொடுத்துவரும் MRG என்ற அனைத்துலக அரசு-சாரா அமைப்பு இலண்டனில் போராட்டம் நடத்தி, இவ்விண்ணப்பித்தை முன்வைத்துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் சமயப் பதட்டநிலைகள் உச்சத்துக்குச் சென்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள இவ்வமைப்பு, மாட்டிறைச்சி உண்டனர் அல்லது மாட்டிறைச்சி விற்றனர் என்று நான்கு முஸ்லிம்கள் அண்மையில் கொல்லப்பட்டது பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளது.

மோடி அவர்கள் பதவியேற்ற பின்னர், இந்தியாவில், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும்  தலித்துகள் மீது சகிப்பற்ற தன்மை அதிகரித்து வருகின்றது என்றும், மோடி அரசு, சமயப் பதட்டநிலைகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றது என்ற கவலைதரும் அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், MRG அரசு-சாரா அமைப்பு கூறியுள்ளது.

நரேந்திர மோடி அவர்கள் இந்தியப் பிரதமராகப் பணியேற்ற பின்னர், இந்தியாவில்  வகுப்புவாத வன்முறைகள் 24 விழுக்காடு அதிகரித்துள்ளன என்று இவ்வமைப்பு கணித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.