2015-11-13 16:06:00

காலத்தின் நிகழ்வுகளோடு இறைவனைத் தொடர்புபடுத்தவேண்டும்


நவ.13,2015. மனிதர்கள் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், இறைவன் அவர்களை மன்னிக்கக் காத்திருக்கிறார் என்ற உண்மையை, தன் நூல்கள் வழியே அருள்பணி Guardini அவர்கள் வெளிப்படுத்தினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

1885ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த Romano Guardini என்ற அருள் பணியாளரின் 130வது பிறந்தநாளையொட்டி, உரோம் நகரில், இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

'Dostojevskiயின் மறைசார்ந்த உலகம்' என்ற தலைப்பில் அருள்பணி Guaradini அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இறைவன் மன்னிப்பவர் என்ற உண்மை அந்நூலில் சக்திவாய்ந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

தான் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளோடு இறைவனைத் தொடர்புபடுத்தி, சிந்தனைகளை வழங்கியவர் அருள்பணி Guaradini என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, நாமும் இந்த முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செல்வம் கொழிக்கும் ஐரோப்பாவைத் தேடி, பசித்தோரும், அந்நியரும் வந்திருப்பது, இறைவன் நமக்கு விடுத்துள்ள ஓர் அழைப்பு என்பதை உணரவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி Guaradini அவர்களின் கருத்தரங்கில் பங்கேற்றவரிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.