2015-11-13 17:02:00

கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு பாதியாகக் குறைவு


நவ.13,2015. கர்ப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் ஏறத்தாழ பாதியாகக் குறைந்துள்ளது என்று ஐ.நா. நிறுவனங்களும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகின்றது.

கர்ப்பகால இறப்புகளின் எண்ணிக்கை 1990ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 44 விழுக்காடு குறைந்துள்ளது என்று கூறும் அவ்வறிக்கை, உலகில் 1990ம் ஆண்டில் 5 இலட்சத்து 32 ஆயிரமாக இருந்த இவ்வெண்ணிக்கை, இவ்வாண்டில் மூன்று இலட்சத்து மூவாயிரமாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.

ஐ.நா.வின் புதிய மில்லென்னிய வளர்ச்சித்திட்ட இலக்குகளின் ஒரு பகுதியாக இவ்விறப்புகளை முழுவதுமாக ஒழிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், தற்போதைய நிலை, 2030ம் ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

நல்ல, தரமான நலவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்றும், இந்த இறப்புகளில் 99 விழுக்காடு, வளரும் நாடுகளில் இடம்பெறுகின்றது என்றும் ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.

அமெரிக்காவில் பெண்கள் கர்ப்பகாலத்தில் இறக்கும் விகிதம் கானடாவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

கர்ப்பகால இறப்புகளில் சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகெங்கும் நடக்கும் மூன்று இறப்புகளில் இரண்டு அப்பகுதியில்தான் நடக்கின்றன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.