2015-11-12 16:14:00

மும்பை தேசிய திருநற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி


நவ.12,2015. 1964ம் ஆண்டு, மும்பை நகரில் நடைபெற்ற அகில உலக திருநற்கருணை மாநாடு, திருத்தந்தை ஒருவர் தலைமையேற்று நடத்திய முதல் மாநாடு என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 12, இவ்வியாழனன்று மும்பை மாநகரில் துவங்கியுள்ள தேசிய திருநற்கருணை மாநாட்டிற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியை இவ்விதம் துவக்கியுள்ள திருத்தந்தை, இந்த நற்கருணை மாநாடு, இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கு முன்னதாக நிகழ்வது மற்றுமொரு சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

"திருநற்கருணையால் ஊட்டம் பெற்று, மற்றவர்களை ஊட்டம் பெறச் செய்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நற்கருணை மாநாடு, இரக்கத்தின் யூபிலி ஆண்டிற்கு ஏற்ற ஒரு கருத்தாக அமைந்துள்ளது என்பதையும்  திருத்தந்தை தன் செய்தியில் மகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உண்மை, இறைமை, நன்மை, பரிவு ஆகியவற்றைத் தேடிவந்துள்ள இந்திய நாட்டில் நடைபெறும் இந்த நற்கருணை மாநாடு, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இறைவன் வழங்கியுள்ள ஒரு கொடை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"அன்பையும், தியாகத்தையும் நிலைநாட்டும் நற்கருணை அருள் அடையாளத்தின் வழியே, கிறிஸ்து அனைத்து இந்திய மக்களின் அருகிலும் வாழ விழைகிறார்" என்று திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் 1964ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, மும்பை நகரில் கூறிய வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருநற்கருணை, நல்லவர்களுக்கு வழங்கப்படும் விருது மட்டுமல்ல, மாறாக, தவறு செய்தோரும், பாவிகளும் தங்கள் உலகப் பயணத்தைத் தொடர வழங்கப்படும் உணவாகவும், மருந்தாகவும் அமைகிறது என்று திருத்தந்தை  எடுத்துரைத்துள்ளார்.

வானிலிருந்து உணவாக இறங்கிவரும் இறைமகனே, இவ்வுலகில் நிலவும் பல்வேறு பசிகளுக்கும், தாகங்களுக்கும் விடையாக, அமையமுடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக்கொள்ளும் அனைவரும், பசியால், தாகத்தால் வாடும் மற்றவருக்கு உதவிகள் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இந்தியாவில் வாழும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இந்த தேசிய நற்கருணை மாநாடு, மகிழ்வைக் கொணரும் ஒளியாக அமையட்டும் என்று, திருத்தந்தை தன் செய்தியின் இறுதியில் ஆசி வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.