2015-11-12 16:30:00

சூரிய சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம் - கொச்சியில்


நவ.12,2015. சூரிய சக்தியில் முற்றிலுமாக இயங்கும் உலகின் முதல் விமான நிலையம், இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது எனும் குற்றசாட்டுக்கள் மேலோங்கி வரும் வேளையில், அந்த அவப்பெயரை கொச்சி நகரம் ஓரளவுக்கு சரி செய்துள்ளது என்று கூறவேண்டும்.

அதிகச் செலவுகளை உருவாக்கும் மின் கட்டணத்தை தவிர்ப்பதற்காக, 46,000க்கும் அதிகமான ‘சோலார்’ தகடுகளைக் கொண்டு விமான நிலையத்துக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பகலில் சூரிய சக்தியிலிருந்து உருவாக்கப்படும் மின்சக்தி, 24 மணி நேரத்திற்கும் போதுமானது என்றும், எனவேதான், 12 மெகாவாட் கொண்ட மிகப்பெரிய சூரிய சக்தி மின் நிலையத்தை உருவாக்கியதாகவும் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் பொது மேலாளர் ஜோஸ் தாமஸ் அவர்கள் கூறினார்.

பகல் வேளைகளில், 6 முதல் 7 மணி நேரம் வரை சூரிய சக்தியிலிருந்து உருவாக்கப்படும் மின்சக்தி, ஒரு முழு நாளுக்கும் தேவையான மின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் ஜோஸ் தோமஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.