2015-11-12 16:50:00

சுலோவாக்கியா ஆயர்களின் ‘அத் லிமினா’ சந்திப்பு


நவ.12,2015. பன்முகக் கலாச்சாரம் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் இன்றையக் காலக்கட்டத்தில், ஒருவர் மற்றவர் மீது காட்டும் மதிப்பு, நம் சந்திப்பு ஒவ்வொன்றிலும் வெளிப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 12, இவ்வியாழன் முதல், 14, இச்சனிக்கிழமை முடிய சுலோவாக்கியா ஆயர்கள் வத்திக்கானில் மேற்கொண்டுள்ள ‘அத் லிமினா’ முயற்சியின் உச்சக் கட்டமாக, அவர்கள் திருத்தந்தையை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய நாடுகளை அடைந்துள்ள ஆயிரமாயிரம் புலம்பெயர்ந்த மக்கள், இந்நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைத்துள்ளனர் என்பதை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இத்தகைய மாற்றத்தை எதிர்கொள்ள, பறந்து விரிந்த மனம் நமக்கு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த மனித நெருக்கடி நிலையை, சட்டம், ஒழுங்குமுறை என்ற எல்லைகளைத் தாண்டி, ஐரோப்பியத் திருஅவை மனிதாபிமானத்துடன் நெருங்கவேண்டும் என்று திருத்தந்தை சுலோவாக்கியா ஆயர்களிடம் விண்ணப்பித்தார்.

குடும்பம் என்ற உன்னத விழுமியத்தைக் காத்து வளர்ப்பதற்கு, ஆயர்கள் செய்துவரும் முயற்சிகளைப் பாராட்டியத் திருத்தந்தை, இளையோர் மீது ஆயர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தங்கள் உடன் உழைப்பாளர்களான அருள் பணியாளர்களை, ஆயர்கள் பரிவுடன் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டத் திருத்தந்தை, அருள் பணிக்கு தங்களையே தயாரித்துவரும் இளையோர் மீது அக்கறை கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.