2015-11-12 16:42:00

இராணுவத்தை வெளியேற்ற கர்தினால் தாக்லே கோரிக்கை


நவ.12,2015. பிலிப்பின்ஸ் நாட்டின் மிந்தனாவோ (Mindanao) பகுதியிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

இராணுவ வெளியேற்றம், மிந்தனாவோ பகுதியில் அமைதி என்ற கோரிக்கைகளை முன்வைத்து, 700க்கும் அதிகமான பழங்குடியினர் மணிலாவில் மேற்கொண்டுள்ள ஒரு போராட்டத்தில் இப்புதனன்று கலந்துகொண்ட கர்தினால் தாக்லே அவர்கள், இவ்வாறு கூறினார்.

அக்டோபர் 26ம் தேதி முதல், பழங்குடியினர் மணிலாவில் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவாக, போராட்டத்தில் ஈடுபட்டோரை, கர்தினால் தாக்லே அவர்கள் இப்புதன்று சந்தித்தார் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

இராணுவத்தினரின் அடக்குமுறை காரணமாக மிந்தனாவோ பகுதியிலிருந்து மக்கள் அண்மைய நாட்களில் வெளியேறி வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், இராணுவ ஆக்கிரமிப்பை அகற்ற, அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.