2015-11-12 16:54:00

இயேசு சபை முன்னாள் மாணவர்களுக்கு திருத்தந்தை செய்தி


நவ.12,2015. இயேசு சபையினர் நடத்தும் நிறுவனங்களில் பயில்வோர், கடவுளோடும், இவ்வுலகோடும் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், இந்தத் தொடர்பின் விளைவாக அவர்கள் சந்திக்கும் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கிவரும் இயேசு சபை நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களின் மாநாடு, நவம்பர் 11, இப்புதன் முதல் 13 இவ்வெள்ளி முடிய ஈக்குவதோர் நாட்டின் Guayaquil என்ற நகரில் நடைபெறுவதையொட்டி திருத்தந்தை அனுப்பியுள்ள ஒரு காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

புனித இஞ்ஞாசியார் எழுதிய ஆன்மீகப் பயிற்சிகளில், 'இறைவன் மனுவுருவாதல்' என்ற தலைப்பில் இடம்பெறும் தியானத்தை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை, தன்  செய்தியை ஒரு தியானமாக வழங்கி, இறைவனின் பார்வையில் இவ்வுலகைக் காணும் பக்குவத்தை, இயேசு சபை முன்னாள் மாணவர்கள் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயேசு சபை முன்னாள் மாணவர்  அமைப்பு, உலக அளவிலும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என்று பல்வேறு பகுதிகள் அளவிலும் இயங்கிவருகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இயேசு சபை முன்னாள் மாணவர் உலக மாநாடு, 2013ம் ஆண்டு, கொலம்பியாவின் Medellin எனுமிடத்தில் நடைபெற்றது. அடுத்த உலக மாநாடு, 2017ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Cleveland எனுமிடத்தில் நடைபெற உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.