2015-11-12 16:50:00

ஆயுதங்களைத் தடுத்து மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டுகோள்


நவ.12,2015. பாலஸ்தீனிய புலம் பெயர்ந்தோருக்கு பணியாற்றும் ஐ.நா.வின் சிறப்பு நிறுவனம் சமர்ப்பித்துள்ள  2014ம் ஆண்டுக்குரிய அறிக்கை, சங்கடமான ஒரு சூழலை வெளிப்படுத்துகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூ யார்க் நகரில் ஐ.நா. அவை நடத்தும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், ஐ.நா.வின் 70வது பொது அமர்வில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

2000 ஆண்டுகளாய் கிறிஸ்தவம் வேரூன்றி வளர்ந்து வந்த பாலஸ்தீனப் பகுதியில், தற்போது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதை திருப்பீடம் வேதனையோடு பதிவு செய்ய விழைகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

ஐ.நா.அவையின் பணிகளைப் போலவே, கத்தோலிக்கத் திருஅவையும் இப்பகுதி வாழ் மக்களுக்கு, குறிப்பாக, இங்கு உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் நிலைக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு கல்வி புகட்டுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்பதையும், பேராயர் அவுசா அவைகள் தன் உரையில்  குறிப்பிட்டார்.

மத்தியக் கிழக்குப் பகுதியின் பல்வேறு நாடுகளில் வெள்ளமென பெருக்கெடுக்கும் ஆயுதங்களைத் தடுத்து நிறுத்தவும், மனிதாபிமான உதவிகளை அங்கு அதிகரிக்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் பேராயர் அவுசா அவைகள் தன் உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.