2015-11-11 15:32:00

புதன் மறைக்கல்வி உரை – திருநற்கருணை, பகிர்வைக் கற்பிக்கிறது


நவ.,11,2015. குடும்பம் குறித்து, கடந்த பல மாதங்களில் 31 தொடர்களை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்றும் குடும்பம் என்ற தலைப்பின் கீழ், மறைக்கல்வி உரையைத் துவக்குவதற்கு முன்னால், இந்நாள்களில் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் இடம்பெறும் இத்தாலிய திருஅவையின் தேசிய மாநாடு குறித்து எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில், திருஅவை அதிகாரிகளும், பொதுநிலையினரும் என எண்ணற்றோர் கலந்து கொள்கிறார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தேசிய மாநாட்டின் வெற்றிக்காக அனைவருடன் இணைந்து, 'அருள் நிறை மரியே' என்ற செபத்தை செபித்தார். பின்னர், 'குடும்பத்தில் ஒன்றித்திருப்பதன் முக்கியத்துவம்' குறித்து தன் புதன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

இரவு உணவு வேளையில் நாம் ஒன்றித்து அமர்ந்து, உணவையும், அந்நாளின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது, ஒன்றித்திருத்தல் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையான அடையாளமாகும்.  இயேசு திருநற்கருணையை நமக்கான உணவாக வழங்கியதால், குடும்பங்களுக்கும் திருப்பலிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. குடும்பத்தில் நாம் அனுபவிக்கும் இந்த ஒன்றிப்பானது, திருஅவை எனும் குடும்பத்தில், இறையன்பின் உலகளாவிய அடையாளமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வகையில் நாம் பார்க்கும்போது, திருநற்கருணை என்பது அனைவரையும் வரவேற்கும் பள்ளியாக மாறி, மற்றவர்களின் தேவைகள் குறித்து நாம் அக்கறையுடனிருக்க கற்றுக் கொள்ள உதவுகிறது. இன்று சில சமூகங்களில், இந்த ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கும், ‘குடும்பமாக இணைந்து உணவருந்தும் பழக்கம்’, மறைந்து வருவது, வருத்தம் தருவதாக உள்ளது. அதேவேளை, நம் சகோதரர்களும் சகோதரிகளும், பசியாலும் பட்டினியாலும் துயருறும்போது, நம் பகிர்வின் அடையாளமாக இருக்கும் உணவு, பலவேளைகளில் தெரிந்தே வீணடிக்கப்படுவதும் கவலை தருகிறது. நம் உணவு, அனைவருடனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதை திருநற்கருணை நமக்கு நினைவூட்டுகின்றது. நம் குடும்பங்களும், அகில உலக திருஅவையும், மனித குலமனைத்தின் நன்மையை மனதில் கொண்டு, ஒன்றித்திருத்தல் மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளங்களாக, அதிலும் குறிப்பாக, வரவிருக்கும் கருணையின் ஆண்டில் மாறுவதாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.