2015-11-11 16:42:00

பாப்பிறை அறிவியல் கழகத்திற்கு திருத்தந்தையின் செய்தி


நவ.11,2015. இன்றைய உலகம் விடுக்கும் சவால்களுக்கு நடுவில், மனிதம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் புதிய கண்ணோட்டத்தில் காண்பதற்கு, பாப்பிறை அறிவியல் கழகம் ஏற்பாடு செய்து வரும் கருத்தரங்குகள் உதவி செய்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பாப்பிறை அறிவியல் கழகம் வத்திக்கானில் நடத்தும் 20வது பொது அமர்வையொட்டி, திருப்பீட கலாச்சார  அவையின் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

"முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் மேற்கொண்ட திருப்பயணப் பாதைகள்" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் பொது அமர்வு, அடுத்துவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டுக்கு தகுந்த தாயாரிப்பாக அமைகிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித ஆண்டுகளின் ஒரு முக்கிய முயற்சியாக திருப்பயணங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில், நமது இவ்வுலக வாழ்வு ஒரு பயணம் என்பதையும், நாம் அனைவருமே பயணிகள் என்பதையும் அந்த முயற்சி நமக்கு நினைவுறுத்துகிறது என்று தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை.

பாப்பிறை அறிவியல் கழகத்தின் ஆதரவுடன், திருஅவை வரலாற்றிலும், இறையியலிலும் முனைவர் பட்டத்திற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, விருதுகளைப் பெற்றவர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்களை இச்செய்தியின் வழி கூறியுள்ளார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.