2015-11-10 14:28:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை – பகுதி - 6


லூக்கா நற்செய்தி, 14ம் பிரிவில் காணப்படும் ‘பெரிய விருந்து உவமை’யை இயேசு எப்போது, ஏன், எதற்காகக் கூறினார் என்ற கேள்விகளுக்குரிய விடைகளைக் கடந்த 5 வாரங்களாக நாம் தேடிவந்துள்ளோம். இந்த உவமையை இயேசு சொல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, விருந்தில் கலந்துகொண்ட ஒருவர் சொன்ன வார்த்தைகள்... "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" (லூக்கா நற்செய்தி 14:15) என்று அந்த விருந்தினர் கூறியதும், இயேசு, அவரிடம் இந்த உவமையைக் கூறினார் என்று லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

"இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்ற கூற்றை, மேலெழுந்த வகையில் பார்த்தால், அது, ஓர் அழகான ஆசியுரைபோல் ஒலிக்கின்றது. ஆயினும், முதல் 14 இறைச்சொற்றோடர்களில் இயேசு பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த விருந்தினர் இந்த வார்த்தைகளைக் கூறினார் என்பதை வாசிக்கும்போது, நம் எண்ண ஓட்டம் விழித்துக்கொள்கிறது. இயேசு அதுவரை என்ன சொன்னார்? விருந்தினரை அவ்விதம் சொல்லத் தூண்டிய இயேசுவின் படிப்பினைகள் என்ன?

"துன்பத்தில் உள்ள ஒருவருக்கு, ஓய்வுநாள் விதிகளை மீறி, உதவி செய்வதில் தவறில்லை."
"நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால், முதலிடங்களைத் தேடுவதற்குப் பதில், கடைசி இடங்களைத் தேடுங்கள்."

என்ற அறிவுரைகளை, பரிசேயர் தலைவர் இல்லத்தில் விருந்துக்கு வந்திருந்த அனைவருக்கும் இயேசு கூறினார். இறுதியாக, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், "நீர் விருந்து அளிக்கும்போது, உமக்கு மறுவிருந்து தரமுடியாத ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர்" (லூக்கா நற்செய்தி 14:13) என்ற ஆசி மொழிகளைக் இயேசு கூறினார்.

இயேசு தன் ஆசி மொழிகள் வழியே பல சவால்களை அங்கிருந்தோர் அனைவருக்கும் விடுத்தார். இவற்றையெல்லாம் உணராததுபோல், ஒதுக்கிவைத்த விருந்தினர், இயேசு கூறிய 'பேறுபெற்றவர் ஆவீர்' என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டதுபோல் தெரிகிறது. 'பேறு பெறுதல்' என்ற வார்த்தைகளுக்கு மற்றொரு இலக்கணம் சொல்வதுபோல், மற்றொரு 'பேறுபெற்றோர்' வாக்கியத்தை அவர் கூறினார். அதுதான், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்ற கூற்று.

விருந்தினர் சொன்ன 'பேறுபெற்றோர்' என்ற கூற்றைக் கேட்டதும், நம் மனங்கள் ஒரு மலைச்சரிவுக்குச் செல்கின்றன. ஆம், மத்தேயு நற்செய்தி, 5ம் பிரிவில், இயேசு மலைப்போழிவைத் துவக்கும்போது, ஒரு சிலரைப் 'பேறுபெற்றோர்' என்று குறிப்பிடுகிறார். இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' வரிசையில், குறிப்பாக இருவரைக் குறித்துப் பேசும்போது, அவர்கள் இறையாட்சிக்கு உரிமையாளர்கள் என்ற 'பேறுபெற்றோர்' என்பதையும் இயேசு குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். இதோ இயேசு கூறிய வார்த்தைகள்:

மத்தேயு 5: 3,10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

அதேபோல், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவிலும், இயேசு 'பேறுபெற்றோர்' என்ற வார்த்தைகளால் ஒரு சிலரைக் குறிப்பிட்டுள்ளார்:

லூக்கா நற்செய்தி 6: 20-23

ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

'பேறுபெற்றோர்' வரிசையில் இயேசு குறிப்பிட்டுள்ள இந்த மனிதர்கள் அனைவரும், பரிசேயர்களின் கணிப்புப்படி, 'சபிக்கப்பட்டவர்கள்'. வறுமை, பிணி, பசி, இகழ்ச்சி ஆகியவை கடவுளால் சபிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை என்பதே அவர்கள் எண்ணம்.

மத்தேயு நற்செய்தியில் 'பேறுபெற்றோர்' என்ற ஆசி மொழிகள் மட்டுமே பதிவாகியுள்ளன. லூக்கா நற்செய்தியிலோ, ஆசிமொழிகளைத் தொடர்ந்து, இயேசு, 'ஐயோ கேடு' என்ற எச்சரிக்கையுடன் ஒரு சிலரைக் குறிப்பிடுகிறார்:

லூக்கா நற்செய்தி 6: 24-26

செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.

இயேசுவின் கண்ணோட்டமும், பரிசேயர்கள் கண்ணோட்டமும் எதிர், எதிர் துருவங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 'ஐயோ கேடு' என்று இயேசு எச்சரிக்கும் மனிதர்கள், பரிசேயர்களின் பார்வையில் ஆசி பெற்றவர்கள், பேறுபெற்றவர்கள். அதேபோல், கடவுளின் கட்டளைகளை எள்ளளவும் தவறாமல் கடைபிடிக்கும் தாங்களும் பேறுபெற்றோர் என்ற கண்மூடித்தனமான உறுதியில், இயேசுவுடன் பந்தியில் அமர்ந்திருந்த பரிசேயர்களில் ஒருவர், "இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்" என்று கூறினார்.

வெளிப்படையாக ஓர் ஆசி மொழிபோல் ஒலிக்கும் இந்த வாக்கியத்திற்குள், குதர்க்கமான எண்ணங்கள் மறைந்துள்ளன என்று, விவிலிய விரிவுரையாளர்கள் சிலர் கூறுகின்றனர். இந்தக் குதர்க்கமான எண்ணங்களுக்கு வார்த்தைவடிவம் கொடுத்தால், அவை இவ்விதம் ஒலிக்கும்: "போதகரே, இறையரசின் விருந்தில் பங்குபெற நீர் தரும் கட்டுப்பாடுகள், நீர் முன்வைக்கும் சவால்கள் தேவையற்றவை. ஒரு யூதர் என்ற முறையில், அதிலும் சிறப்பாக, ஒரு பரிசேயர் என்ற முறையில் நானும் என் உடன் பரிசேயரும் இறையாட்சி விருந்தில் பங்குபெற ஏற்கனவே அழைப்பு பெற்றுவிட்டோம். எனவே, நாங்கள் பேறுபெற்றுவிட்டோம். நீர் இப்போது புதிதாக வேறு அளவுகோல்களை எங்கள் மீது திணிக்கவேண்டாம்" என்று அவர் இயேசுவிடம் நினைவுறுத்துவதுபோல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

விருந்தினர் கூறிய ‘பேறுபெற்றோர்’ வாக்கியத்திற்குப் பின் ஒளிந்திருந்த மாற்று எண்ணங்களை இயேசு உணர்ந்திருக்கவேண்டும். எனவே, அவர், தனக்கே உரிய பாணியில் விருந்தினருக்குப் பாடங்கள் புகட்ட முற்பட்டார். இயேசு கூற விழைந்த விளக்கமான பதிலை நாம் பின்வரும் வார்த்தைகளில் எண்ணிப் பார்க்கலாம்:

"இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர் என்று நீர் சொன்னது, மிகவும் சரியான கூற்று. ஆனால், இறையாட்சி விருந்தில் யார் பங்குபெற முடியும் என்பதை நீர் புரிந்துகொள்ள வேண்டும்.

யூதராக, பரிசேயராகப் பிறப்பது, இறைவன் விடுத்துள்ள மிகச் சிறந்த அழைப்பு. அந்த அழைப்பை ஏற்று, தகுந்த வகையில் பதில் சொல்வதால் மட்டுமே, இறையரசில் ஒருவர் நுழையமுடியும், இறையாட்சி விருந்தில் கலந்துகொள்ள முடியும். இறைவன் தரும் அழைப்பை ஏற்க மறுத்து, வேறுபல காரணங்களை நீங்கள் தந்தால், இவ்வழைப்பு மற்றவர்களுக்குத் தரப்படும்" என்பதே இயேசுவின் விளக்கமான பதிலாக அமைந்திருக்கும்.

தான் தரவிழைந்த விளக்கத்தைக் கதையாகக் கூறினார், இயேசு. அந்தக் கதையே, 'பெரிய விருந்து உவமை'யாக நம்மை வந்தடைந்துள்ளது. லூக்கா நற்செய்தி 14ம் பிரிவில் 15 முதல் 24 முடிய உள்ள 10 இறைச் சொற்றொடர்களில் நாம் காணும் இவ்வுவமையை ஒத்த மற்றொரு உவமையை மத்தேயு நற்செய்தியிலும் (மத். 22: 1-10) காண்கிறோம்.

லூக்கா நற்செய்தியில் நாம் காணும் இவ்வுவமையை, அழைப்பும் மறுப்பும், வேறு சிலரின் அழைப்பு என்று இரு பகுதிகளாகக் காணலாம். அழைப்பும், மறுப்பும் என்ற முதல் பகுதியில் இயேசு கூறும் வார்த்தைகள் இதோ:

லூக்கா நற்செய்தி 14: 16-21

ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, 'வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது' என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், 'வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார். 'நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றார் வேறொருவர். 'எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது' என்றார் மற்றொருவர். பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.

உவமையின் முதல் பகுதியை வாசித்ததும், மனதில் படும் இரு எண்ணங்களை முதலில் சிந்திப்போம். அழைப்பு இருமுறை அனுப்பப்பட்டது என்பது முதல் எண்ணம். அழைக்கப்பெற்றவர்கள் கூறும் சாக்குப் போக்குகள் இரண்டாவது எண்ணம். விருந்தை ஏற்பாடு செய்தவர், அவ்விருந்திற்கென பலரை முன்கூட்டியே அழைத்தார் என்றும், விருந்து நாள் வந்தபோது, அழைப்பு பெற்றவர்களிடம் மீண்டும் தன் பணியாளரை அனுப்பி, அவர்களை வரச் சொன்னார் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். ஏனோதானோ என்று கடமைக்காக அழைப்பது வேறு, பணியாளரை அனுப்பி ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைப்பது வேறு.

ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, ஒவ்வொரு நாளும் இறைவன் தரும் அழைப்பின் அழகையும், அதற்கு நாம் தரும் அர்த்தமற்ற மறுப்பையும் தொடர்ந்து அடுத்தவாரம் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.