2015-11-10 15:10:00

பீகார் தேர்தல்கள் மக்களாட்சிக்கு கிடைத்த வெற்றி


நவ.10,2015. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இந்துமத ஆதரவு ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளது, இந்தியாவில் சமயச் சார்பற்ற மற்றும் மக்களாட்சி விழுமியங்களுக்கு கிடைத்த வெற்றியாக உள்ளது என்று, தலத்திருஅவைத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிழக்கிந்திய மாநிலமான பீகாரில் இடம்பெற்ற தேர்தலில் மூன்று கட்சி கூட்டணி, 243 இடங்களுக்கு 178 இடங்களிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இத்தேர்தல் முடிவுகள் குறித்து UCA செய்தி நிறுவனத்திடம் பேசிய பாட்னா பேராயர் வில்லியம் டி சூசா அவர்கள், நாட்டின் மிகப் பழமைமிக்க சனநாயக, சமயச்சார்பற்ற மற்றும் அறநெறிப் பண்புகளை உறுதிப்படுத்துவதாக இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று கூறினார்.

பீகாரின் 8 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 53 ஆயிரம் பேர் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்றும், இத்தேர்தல் முடிவுகள் சிறுபான்மை மதத்தவர்க்கு கிடைத்த வெற்றி என்றும் தலத்திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.