2015-11-10 15:02:00

பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிடுவதால் புற்றுநோய் ஆபத்து


நவ.10,2015. பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் ஏற்படுவற்கான ஆபத்து உள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் மாமிசத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிகத் தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.  

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிவப்பு மாமிசத்தை மற்றும் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை உண்பதால் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

உலக அளவில் மாமிச ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒரு கிலோ மாமிசத்தைப் பதப்படுத்தி ஏற்றுமதிக்கு தயார் செய்ய ஏறக்குறைய 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு கிலோ காய்கறிகளைப் பதப்படுத்தி தயார் செய்ய 320 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதுமானது.

இந்நிலையில் மாமிசத்தைப் பதப்படுத்துவதற்கு அதிகத் தண்ணீரை செலவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதுதவிர மாமிசப் பதப்படுத்தலால் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் கால்நடைகளால் 18 விழுக்காடு பசுமைக்குடில் வாயு வெளியாகிறது.

இந்திய மாட்டுப் பண்ணைகளில் நோய் எதிர்ப்பு மருந்துகள் இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்படாத நுண்கிருமியின் பாதிப்பு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய நுண்கிருமியால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.