2015-11-10 14:50:00

திருப்பணியில் கிறிஸ்துவே தொடர்ந்து நற்செய்தியை அறிவிக்கிறார்


நவ.10,2015. ஓர் ஆயரின் திருப்பணியின் வழியாக, கிறிஸ்துவே தொடர்ந்து நற்செய்தியை அறிவிக்கிறார் மற்றும் விசுவசிப்பவர்களுக்கு விசுவாசத்தின் பேருண்மைகளை வழங்குகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழாவான இத்திங்கள் மாலை அப்பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி, அருள்பணி Angelo De Donatis அவர்களை, தனது உரோம் மறைமாவட்டத்திற்குப் புதிய துணை ஆயராக திருப்பொழிவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஓர் ஆயரின் தந்தைக்குரிய செயல் வழியாக, கிறிஸ்து தமது உடலில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கிறார் என்றும், ஓர் ஆயரின் ஞானம் மற்றும் மெய்யுணர்வுப் பண்புகள் வழியாக, கிறிஸ்து அவரின் இவ்வுலகப் பயணத்தில் நித்திய மகிழ்வை நோக்கி வழிநடத்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

புதிய ஆயர் நம் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நினைவுபடுத்திய  திருத்தந்தை, ஆயர் என்பவர், இரக்கமும் கருணையும் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆயரின் வார்த்தைகள் எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமையுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மறையுரைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் வழங்குமாறும் கூறினார்.

உரோம் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா, உரோம் மற்றும் உலகிலுள்ள அனைத்து ஆலயங்களின் அன்னையாகவும், தலைமையாகவும் விளங்குகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.