2015-11-10 14:20:00

கடுகு சிறுத்தாலும்... உலகில் தீமைகள் பெருக யார் காரணம்?


வயதான பெண் ஒருவர், தன் வாழ்நாளெல்லாம், நேரிய வழியைக் கடைபிடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். ஒவ்வொரு நாளும், நகரின் தெருக்களில், "அதிகாரம், பேராசை, ஊழல்... அதிகாரம், பேராசை, ஊழல்..." என்ற மூன்று வார்த்தைகளை, மீண்டும், மீண்டும், உரத்தக் குரலில் கத்தியபடியே நடந்து சென்றார். ஒரு சிலர் நின்று, அவர் கத்துவதைக் கேட்டனர்; பின்னர், தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். பல ஆண்டுகளாக அந்த மூதாட்டி இவ்விதம் கத்தியதால், மக்கள் அந்தக் கூச்சலுக்கு பழக்கப்பட்டு விட்டனர். அவர் சொல்வதைக் கேட்பதற்கு யாரும் நிற்பதில்லை.

அவ்வூரில் வாழ்ந்த ஒரு சிறுவன், ஒருநாள், அந்த மூதாட்டியை வழிமறித்து, "பாட்டி, நீங்கள் சொல்வதைதான் யாருமே கேட்பதில்லையே... பின், ஏன் இவ்விதம் கத்துகிறீர்கள்?" என்று கேட்டான்.

அந்த மூதாட்டி சிறுவனிடம், "தம்பி, நான் கூச்சலிடுவது அவர்களை மாற்றுவதற்கல்ல. அவர்கள் என்னை மாற்றாமல் இருப்பதற்காகவே கத்திக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொல்லிவிட்டு, 'அதிகாரம், பேராசை, ஊழல்...' என்று கத்தியபடியே நடந்தார்.

"இந்த உலகம் ஆபத்தானதாக மாறுவதற்கு, தீமை செய்பவர்கள் முக்கிய காரணம் அல்ல; மாறாக, நடக்கும் தீமைகளைக் கண்டும், ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களே, தீமைகள் பெருகக் காரணமாகின்றனர்" (“The world is not dangerous because of those who do harm but because of those who look at it without doing anything.”) என்று சொன்னவர், அறிவியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.