2015-11-10 14:56:00

இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டில் கர்தினால் இரஞ்சித்


நவ.10,2015. மும்பையில் தொடங்கவிருக்கும் இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கலந்து கொள்வார்.

இந்திய தேசிய திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் திருஅவை பிரதிநிதிகள் குழுவில், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களுடன், மும்பை குருத்துவ கல்லூரியின் இறையியல் அறநெறியியல் பேராசிரியர் அருள்பணி ஸ்டீபன் பெர்னான்டஸ், நீதித்துறையின் உதவித் தலைவர் அருள்பணி ஜெர்விஸ் டி சூசா ஆகிய இருவரும் உள்ளனர்.

“கிறிஸ்துவால் ஊட்டம்பெற்று, பிறரை ஊட்டம் பெறச் செய்வோம்” என்ற தலைப்பில் மும்பையில் வருகிற வியாழனன்று(நவ.12-15) தொடங்கும் இந்திய தேசிய திருநற்கருணை மாநாடு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

மும்பையில் 1964ம் ஆண்டில் நடைபெற்ற அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், புனித சாமிநாதர்(தொமினிக்கன்) துறவு சபை ஆரம்பிக்கப்பட்டதன் 800ம் ஆண்டை முன்னிட்டு, அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்து விசுவாசிகளுக்கும் பரிபூரணபலன் சலுகையை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போதகர்கள் சபை எனப்படும் புனித சாமிநாதர் துறவு சபை ஆரம்பிக்கப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அச்சபையினர் இத்திங்களன்று ஜூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளனர்.

1170ம் ஆண்டில் இஸ்பெயின் நாட்டின் Caleruegaவில் பிறந்த புனித சாமிநாதர் அவர்களும், அவரின் தோழர்களும் 1215ம் ஆண்டில் துலுஸ் நகரில் தங்கள் துறவு வாழ்வைத் தொடங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.