2015-11-09 15:07:00

வாரம் ஓர் அலசல் – உள்ளொளி உணர்த்தும் தீபாவளி


நவ.09,2015. அன்புள்ளங்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள். நம் அனைவர் வாழ்விலும் ஒளிரட்டும் தீபத் திருநாள். 

ஒருமுறை காட்டு அரசர் தனது குடும்பத்துடன் காட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது இளவரசர் சிங்கக் குட்டி வழி தவறி அருகிலிருந்த ஊருக்குள் சென்று விட்டது. காட்டிலுள்ள விலங்குகள் அனைத்தும் அதைத் தேடி அலைந்தன. ஊருக்குள் சென்ற சிங்கக் குட்டி, மனிதர்கள் பட்டாசுகளைக் கொளுத்தி ஆனந்தமாக விழாக் கொண்டாடுவதைப் பார்த்தது. பட்டாசு வெடி சப்தங்கள் அதற்குப் புதிதாக இருந்ததால் அஞ்சி நடுங்கி, தெருவில் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாய் வந்த தெரு நாய் ஒன்று சிங்கக் குட்டியை இனம் கண்டு, என்ன, தீபாவளிப் பண்டிகையை வேடிக்கை பார்ப்பதற்காக காட்டிலிருந்து இங்கு வந்துவிட்டீரா? என்று கேட்டுச் சிரித்தது. முதலில் பயந்த சிங்கக் குட்டி, பின்னர் கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, இப்படியா விழாக் கொண்டாடுவார்கள், வெடி சப்தம் காதைத் துளைக்கின்றது, பட்டாசு வெளிச்சத்தில் கண்கள் கூசுகின்றன என்று சொன்னது. ஆமாம், மக்கள் இப்படித்தான் தீபாவளி கொண்டாடுவார்கள். இவ்விழாவின்போது சில சமயங்களில் சிறுவர்கள் எங்களைப் போன்ற பிராணிகளின் வாலில்கூட பட்டாசுகளைக் கொளுத்தி விளையாடுவார்கள் என்றது தெரு நாய். சரி, எனக்குக் காட்டுக்குப் போக வழிகாட்டுங்கள் என்று கேட்டு காட்டுக்குள் சென்றது சிங்கக் குட்டி. அதைக் கண்ட விலங்குகள் அனைத்தும் மகிழ்ந்தன. சிங்கக் குட்டி, தனது தந்தையிடம், இவ்வாண்டு நாமும் காட்டில் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றது. உடனே காட்டில் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் வரவழைக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த பறவைகள், சிங்கத்திடம், அரசே, நம் காட்டில் தீபாவளியைக் கொண்டாடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதேநேரம் கவலையாகவும் உள்ளது. நாம் புது ஆடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவோம், ஆனால் பட்டாசுகள் வேண்டாமே என்றன. மத்தாப்பு, பட்டாசுகள் இல்லாத தீபாவளியா என்றது சிங்கம். அதற்கு ஒரு பறவை, அரசே, நாங்கள் ஊர் ஊராய்ச் சுற்றித் திரிபவர்கள். எல்லா ஊர்களிலும் தீபாவளி பண்டிகையைப் பார்த்திருக்கிறோம். அரசே, பட்டாசுகள் வெடிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் நச்சுப் புகை காற்று மண்டலத்தை மாசுபடுத்தி விடும். எங்களைப் போன்ற பறவைகளுக்கும், முயல், முள்ளம்பன்றி போன்ற சிறிய விலங்குகளுக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். அதனால் எங்களைப் போன்ற பறவைகள் கூடும் கிராமங்களில் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றது. இதைக் கேட்ட சிங்கக் குட்டி, அப்பா, இவ்வளவு பெரிய தீமையா, நாமும் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றது. பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன.

அன்பு நெஞ்சங்களே, தீபாவளி என்றவுடன் புத்தாடை, பட்டாசு, பலகாரம் இவையே நம் நினைவுக்கு வருகின்றன. தீபாவளி என்றால் தீபங்களை ஏற்றி வழிபடுவது ஆகும். தீபாவளி, இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். உலகில் எங்கெல்லாம் இந்தியர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இத்திருநாள் மிகவும் கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் தென் பகுதிகளில் மூன்று நாள்களும், வட பகுதிகளில் ஆறு நாள்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அமாவசை நாளில் கொண்டாடப்படும் இவ்விழாவுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த நரகாசுரன் என்ற அரக்கன் கொல்லப்பட்ட நாளும்,  ராமர், ராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாளும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

கடைசி சமண தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் அவர்கள், பாவாபுரி அரசர் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்து, எல்லாரும் விழித்து எழுந்தபோது, மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசர் சான்றோருடன் கூடி ஆலோசனை நடத்தினார். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடுபேறு அடைந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகின்றது.

தீபாவளி திருவிழாவுக்கு இப்படி மேலும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. தீபத் திருநாள், தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் ஆகும். தீபம் என்றால் ஒளி. நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கின்ற இருள் மறைய வேண்டுமென்று இவ்விழா கொண்டாடப்படுகின்றது. நன்மை, தீமையை வெற்றி கண்டதைக் கொண்டாடப்படுகின்றது. அறிவெனும் விளக்கேற்றி, அறியாமை அனைத்தையும் விரட்ட தீபாவளி கொண்டாடப்படுகின்றது. மொத்தத்தில், நம் அகத்தின் அழுக்கும், இருளும் ஒழிந்து போக வேண்டுமென்று இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. ஒளியையும், மகிழ்வையும், நன்மைத்தனத்தையும் கொண்டாடுவதாக இவ்விழா அமைந்துள்ளது. நமது உள்ளொளியை உணரும் விழாவாக தீபாவளி சிறப்பிக்கப்படுகின்றது.

நம்மில் அன்பு ஒளி, பகைமையை வென்றால், உண்மை ஒளி பொய்மையைத் விலக்கினால், உறவு ஒளி இல்லத்தை நிறைத்தால், பக்தி ஒளி பாவத்தைக் கடந்தால், அனுபவ ஒளி, மனிதரைப் படித்தால், கருணை ஒளி, வேற்றுமையை கரைத்தால், பண்பு ஒளி பதவியில் நிலைத்தால், அறிவு ஒளி அகிலத்தில் சிறந்திருந்தால், இலட்சிய ஒளி இருளில் விழித்துக்கொண்டால்... நம் வாழ்வில் தீமை எனும் அரக்கன் நம்மை நெருங்கமாட்டான். இத்திருநாளில் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து ஒளியை வணங்கினால் மட்டும் போதாது. நம் வாழ்விலுள்ள தீய பழக்கங்களை, தீய குணங்களை எரித்துவிட இவ்விழா நாளில் நாம் உறுதிபூண வேண்டும். கள்ளுக்கடை, சாராயக்கடை, டாஸ்மாக் கடைகள் போன்ற அரக்கன்கள் பக்கம் இவ்விழா நாளில் செல்ல மாட்டேன், அங்குச் செல்பவர்களைத் தடை செய்வேன், என் குடும்பத்தோடு, என் பிள்ளைகளோடு இத்திருநாளைச் செலவிடுவேன், தீபத் திருநாளில் எடுக்கும் உறுதியை, தொடர்ந்து வாழ்வில் கடைப்பிடிப்பேன்... இவை போன்ற நல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

நம்மிடம் இருக்கும் தீய பழக்க வழக்கங்களில் ஏதேனும் ஒன்றையாவது தீபாவளியன்று  விட்டுவிட வேண்டும். புகைத்தல், பொய் சொல்தல், எதிரி மீது வழக்குத் தொடுத்தல், பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை போடுதல், உறவுகளுடன் மனவருத்தமாக இருத்தல் போன்றவற்றை விட்டுவிடலாம். தீபாவளி அன்று இனிப்பு கொடுத்து சமாதானம் ஆகலாம். புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து, இனிப்பு சாப்பிடுவதற்கு மட்டும் தீபாவளி அல்ல, ஆனால் இப்படி நல்ல பண்புகளை வளர்க்கத்தான் தீபாவளி. வெளிப்புறத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றுவது அல்ல தீபாவளி, மாறாக, மனத்திலுள்ள தீய குணங்களை வெடிக்கச் செய்து பொசுக்கி விடுவதுதான் தீபாவளி. தீபத் திருநாளில் நாம் ஏற்றி வைக்கும் தீபங்கள் நம் அகவாழ்வில் தொடர்ந்து சுடர்விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் அகத்தில் உள்ள இருள்மேகங்களை விலக்கி, நம் உள்ளொளியை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். 

அன்று தீபாவளி. வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். அந்த வீட்டில் சாருமதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க மாப்பிள்ளை. அம்மா வீட்டு வேலைகளில் பரபரப்பாக இருந்தார். சாரூ… மகளே,  சமையலில் உதவக் கூடாதா? எப்போதும் புத்தகமும் கையும்தானா?” என்றது அம்மாவின் குரல். அடுத்து அப்பா அழைத்தார். சாரூ... மாப்பிள்ளை உன்னிடம் பேச வேண்டுமாம், இன்று மாலை வர்றாராம்மா…”என்றார். ஆமாம், இன்னைக்குத் தீபாவளி ஆச்சேப்பா, அவங்க வீட்டில கொண்டாடமா  இங்க வந்து என்ன பண்ணப் போறார்? என்றார் சாரூ. பின்னர் மீண்டும் புத்தகத்தோடு வீட்டின் முன்பக்கம் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டாள் சாரூ. எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம், பிடிவாதம், எதிர்ப்பேச்சு. இருபத்தி நாலு வயசாச்சு, இன்னும் குழந்தை புத்தி, ஆண்டவா” என்றழைத்தார் அம்மா. எல்லாம் சரியாயிடுவா, நல்ல நாளும் அதுவுமா அவளத் திட்டாதே”என்றார் அப்பா. இவர்கள் உள்ளே பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு சுகந்தி அக்காவின் அலறல் சத்தம்! குழந்தை பாலாஜீ வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்தான். சாரூ வாசற்கதவைத் திறந்து ஓடினாள்., சுகந்தி அக்கா பலகாரங்கள் செய்து கொண்டிருந்தாள் போல. வீடெங்கும் மாவும், சர்க்கரையும் கொட்டிக்கிடந்தன. “சாவிக் கொத்தைக் கொடு, தண்ணீர் தெளி.” குடித்தனங்களில் இருந்த அனைவரும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னார்கள். சாரு நிற்கவில்லை… அக்கா, குழந்தையை எடுத்துகிட்டுப் பின்னாடி உட்காருங்க. நர்ஸிங் ஹோமுக்குப் போகலாம்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு தனது வண்டியில் பறந்து விட்டாள். நல்ல நாளும் அதுவுமா இந்தப் பொண்ணு… குளிக்கக்கூட இல்ல. மணி மூன்றாகி விட்டது. மாப்பிள்ளை வர்றேன்னு சொல்லி இருக்கார். சாரூவை இன்னும் காணோம். அம்மா பொருமிக் கொண்டிருந்தார்.  பக்கத்தில் இருக்கும் நர்ஸிங் ஹோமுக்குத்தான் போயிருப்பாள். நான் போய் அழைத்து வருகிறேன்” என்று அப்பா கிளம்பினார். ஒரு மணி நேரம் கழித்து திரும்பியவர்… பக்கத்தில இருக்குற பல கிளினிக்குகள் மூடி இருக்கு. எங்கே போனாளோ தெரியலை” என்றார். அம்மாவுக்குத் தலை சுற்றியது. மாப்பிள்ளையும் வந்து விட்டார். அவர் வந்து இரண்டு மணி நேரமாகிவிட்டது. சாருவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. மணி எட்டைத் தொடப்போனது. தெருவெங்கிலும் பட்டாசுச் சத்தம். கடுகடுப்போ, கோபமோ சிறிதும் இல்லாமல், மாப்பிள்ளை பலகாரம் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார். ஆனாலும் அம்மாவுக்குப் பயம் விடவில்லை. மணி எட்டரை ஆனபோது, வாசலில் வண்டி சத்தம். சாரூ வந்துவிட்டாள். அம்மா கோபத்தில் படபடத்தாள். அம்மா.. நான் என்ன திருட்டா பண்ணிட்டு வந்திருக்கேன். வழி விடுங்க… என்று நேராக மாப்பிள்ளையிடம் சென்றாள் சாரூ. “வாங்க ஜெயந்த்…. மன்னிக்கணும். ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டேன். “காலையில பக்கத்து வீட்டு குழந்தைக்குத் திடீர்னு வலிப்பு வந்துருச்சு…. அவனோட அப்பாவும் ஊரில் இல்லை. தீபாவளி என்று மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. பிறகு தில்லை நகரில் ஒரு மருத்துவமனையில் சேர்த்துவிட்டேன். ஐசியூவில் இருக்கிறான் குழந்தை. மூளையில் இரத்தச் கசிவாம் மூளைச் சிகிச்சை நிபுணர் வரவேண்டி ஆனது. ஒரே அலைச்சல், வீட்டுக்குத் தொலைபேசியில் பேசக்கூட முடியவில்லை. அழுது கொண்டே இருந்த அவனது அம்மாவைத் தனியாக விட்டு வரவும் மனமில்லை. இப்போது கொஞ்சம் தைரியம் வந்து, நீ வீட்டுக்குப் போம்மா என்று அவங்க சொன்னாங்க. கிளம்பி வந்தேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்றாள் சாரூ. “அச்சச்சோ… நான் தப்பாவே நினைக்கல சாரூ. உங்கள் உதவும் குணத்தைப் பாராட்டுகிறேன். குழந்தை உடல் நிலை சரியாகணும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன். வரும் பதினைந்தாம் தேதி நாம் அமெரிக்கா புறப்பட வேண்டும். அதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யணும். இந்தக் காகிதங்களில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும் என்றார் ஜெயந்த். சாரூவின் அம்மாவும் அப்பாவும், நிம்மதியாக உள்ளே சென்றனர்.

அன்பு நெஞ்சங்களே, மீண்டும் உங்களுக்கு எமது தீபத் திருநாளாம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மனஅமைதி தழைக்கட்டும். வளமும் நலமும் பெருகட்டும், பகைமை நீங்கி அன்புத் தீபங்கள் சுடர்விடட்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறியிருப்பதுபோல, எத்தனை தடைகள் இடர்படினும், நம் வாழ்வைச் சீர்திருத்த துணிச்சல் கொள்வோம். நம் அகத்தில் இருளை நிறைக்கும் தீய பழக்கங்கள், தீய குணங்களை அகற்றும் முயற்சியில், எதிர்ப்படும் புகை மேகங்களை அகற்றுவதற்கு உறுதி எடுப்போம். இவ்வாண்டு தீபாவளி நம் வாழ்வில் புது ஒளியை வீசட்டும். நம் உள்ளத்தில் உறைந்துள்ள இறைஒளியை உணர்த்தும் திருநாளாக, தீபத் திருவிழாவைக் கொண்டாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.