2015-11-09 15:32:00

வறியோருக்குத் தீங்கிழைப்போர் இறைவனை வழிபடமுடியாது


நவ.09,2015. செபத்தையும், வழிபாட்டையும் நீதியிலிருந்து பிரிக்கமுடியாது என்றும், வறியோருக்குத் தீங்கிழைப்பவரால் இறைவனை வழிபடமுடியாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நவம்பர் 8, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, காணிக்கை பெட்டியில் இரு காசுகளைப் போட்ட கைம்பெண், உன்னத கிறிஸ்தவரின் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

இயேசுவைப் பின்தொடர்வோரிடம் இருக்கக்கூடாத குணங்களை, செல்வந்தர்கள் வெளிப்படுத்தினர் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, காணிக்கை பெட்டிக்கு முன் சுயவிளம்பரம் தேடிய செல்வந்தர்களை விட, ஏழைக் கைம்பெண்ணை இயேசு அடையாளம் கண்டார் என்று குறிப்பிட்டார்.

வறியோரோடு பகிர்வது எப்போது உண்மையான பகிர்வு என்பதைக் குறிப்பிட, திருத்தந்தை தான் ஆயராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஓர் இல்லத்தலைவி, தன் இரு பிள்ளைகளுக்கு உணவைப் பரிமாறிய வேளையில், அங்கு தர்மம் கேட்டு இருவர் வந்ததாகவும், அவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பழைய உணவைக் கொடுக்க எண்ணிய பிள்ளைகளிடம், அவர்கள் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவிலிருந்து வந்தவர்களுக்கு அவர்கள் தரவேண்டும் என்று அந்த அன்னை கூறியதாகவும் திருத்தந்தை தன் அனுபவ நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார்.

நமக்குத் தேவையென்று நாம் வைத்திருக்கும் பொருள்களிலிருந்து, தேவையில் இருப்போருக்கு உதவி செய்யும்போது, நமது பகிர்வு இன்னும் பொருளுள்ளதாக விளங்கும் என்று தன் மூவேளை செப உரையில் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.