2015-11-09 15:00:00

கடுகு சிறுத்தாலும் – பட்டாசுகள் வெடிக்காத தீபாவளி


ஒருமுறை இளவரசர் சிங்கக் குட்டி வழி தவறி அருகிலிருந்த ஊருக்குள் சென்று விட்டது. அவ்வூரில் வான வேடிக்கையையும், மக்கள் மத்தாப்பு கொளுத்தி ஆனந்தமாக விழாக் கொண்டாடுவதையும் பார்த்தது. அப்போது அவ்வழியாய் வந்த தெரு நாயிடம், இதென்ன ஒரே சப்தமும், புகையும் என்று கேட்டது சிங்கக் குட்டி. ஆமாம், மக்கள் இப்படித்தான் தீபாவளி கொண்டாடுவார்கள். இவ்விழாவின்போது சில சமயங்களில் சிறுவர்கள் எங்களைப் போன்ற பிராணிகளின் வாலில்கூட பட்டாசுகளைக் கொளுத்தி விளையாடுவார்கள் என்றது தெரு நாய். சரி, எனக்குக் காட்டுக்குப் போக வழிகாட்டுங்கள் என்று கேட்டு காட்டுக்குள் சென்றது சிங்கக் குட்டி. பின்னர் தனது தந்தையிடம், இவ்வாண்டு நாமும் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றது. உடனே காட்டில் எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் வரவழைக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த பறவைகள், சிங்கத்திடம், அரசே, நம் காட்டில் தீபாவளியைக் கொண்டாடுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அதேநேரம் கவலையாகவும் உள்ளது. நாம் புது ஆடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி மட்டும் கொண்டாடுவோம், ஆனால் பட்டாசுகள் வேண்டாமே என்றன. பட்டாசுகள் இல்லாத தீபாவளியா என்றது சிங்கம். அதற்கு ஒரு பறவை, அரசே, நாங்கள் ஊர் ஊராய்ச் சுற்றித் திரிபவர்கள். எல்லா ஊர்களிலும் தீபாவளி பண்டிகையைப் பார்த்திருக்கிறோம். அரசே, பட்டாசுகள் வெடிக்கும்போது அவற்றிலிருந்து கிளம்பும் நச்சுப்புகை காற்று மண்டலத்தை மாசுபடுத்தி விடும். எங்களைப் போன்ற பறவைகளுக்கும், முயல், முள்ளம்பன்றி போன்ற சிறிய விலங்குகளுக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். அதனால் எங்களைப் போன்ற பறவைகள் கூடும் கிராமங்களில் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றது. இதைக் கேட்ட சிங்கக் குட்டி, அப்பா, இவ்வளவு பெரிய தீமையா, நாமும் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றது. பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.