2015-11-09 15:49:00

அமைதியான வருங்காலத்திற்கு, ஆயுத ஒழிப்பு அவசியம்


நவ.09,2015. அண்மைக் காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் தலைதூக்கிவரும் மோதல்கள், பல்வேறு மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருவது குறித்து உலக சமுதாயம் அக்கறையின்றி இருப்பதாக, ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி, பேராயர் சில்வானோ தொமாசி.

இத்தகைய மனிதகுல பேரழிவுகளை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்கள், ஒழுங்கானத் தீர்வைத் தருவதில்லை என்று கூறியப் பேராயர்,  போர்ப்பகுதிகளில் வாழும் மக்களின் துயர் துடைக்க, அனைத்துலகச் சட்டங்கள், எவ்வகையில் உதவியுள்ளன என்பது குறித்து ஆராய்ந்து, அவற்றை மாற்றியமைக்க வேண்டிய தேவையை உணரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி அவர்கள், ஆயுத ஒழிப்பின் தேவை குறித்து, இத்திங்களன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற பேராயர் தொமாசி அவர்கள், அமைதியான, நிலையான ஒரு வருங்காலத்தை வடிவமைக்க விரும்புவோர் அனைவரும், ஆயுத ஒழிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.