2015-11-07 15:15:00

திருத்தந்தை : உழைப்பும், ஒய்வும் மனிதர்களுக்கு மிக அவசியம்


நவ.07,2015. மனிதர்களின் அடிப்படை இயல்பையும், அந்த இயல்பைக் கடந்த ஓர் உயர்ந்த நிலையையும் உறுதிப்படுத்தும் மனிதத் தொழிலின் உரிமைகளைப் பாதுகாக்க உழைக்கும் இத்தாலிய தேசிய சமுதாயப் பாதுகாப்பு கழகத்தின் பணிகளைப் பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய தேசிய சமுதாயப் பாதுகாப்பு கழகத்தைச் சேர்ந்த 23,000க்கும் அதிகமான உறுப்பினர்களை, இச்சனிக்கிழமை மதியம் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மத சார்பற்ற இவ்வமைப்பினர், இவ்வளாகத்தில் முதல் முறையாகக் கூடி வந்திருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

உழைப்பு என்பது மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, ஒய்வு என்பதும் மனிதர்களுக்கு மிக அவசியம் என்பதை தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த ஓய்வினை இறைவனே ஆசீர்வதித்துள்ளார் என்பதை விவிலியம் கூறுகிறது என்று எடுத்துரைத்தார்.

ஓய்வைக் குறித்து தான் முதலில் பேசுவது ஒரு சிலருக்கு வியப்பாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மனிதர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கிடைக்கும் பணியும், அந்தப் பணியிலிருந்து மதிப்புடன் பணி ஒய்வு பெறுவதும் அனைத்து மனிதருக்கும் உள்ள அடிப்படை ஆவல் என்று கூறினார்.

ஓய்வெடுப்பது, பணி ஒய்வு பெறுவது ஆகிய எண்ணங்கள் இன்றைய காலத்தில் வெவ்வேறு பொருள் பெறுகின்றன என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, முதுமை, நோய், பணி ஒய்வு, பணியிடங்களில் காயப்படுதல் ஆகிய பிரச்சனைகளை, இத்தாலிய தேசிய சமுதாயப் பாதுகாப்பு கழகம், சரியான கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மனித உழைப்பு, இறைவனின் படைப்பாற்றலில் பங்கு பெறுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு என்று கூறியத் திருத்தந்தை, உழைப்பின் மாண்பு சிதைக்கப்படும் வேளையில் அதற்குத் தகுந்த தீர்வுகள் காண்பது நம் கடமை என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.