2015-11-06 16:05:00

பணப்பற்று கொண்ட ஆயர்களைக் காண்பது, வேதனை - திருத்தந்தை


நவ.06,2015. பணத்தின் மீது பற்றுகொண்டுள்ள அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் காணும்போது வேதனையாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியுள்ள சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளியன்று காலை வழங்கிய மறையுரையில், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க தன்னையே அர்ப்பணித்த புனித பவுல் அடியாரையும், நற்செய்தியில் கூறப்பட்டிருந்த  நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளரையும் மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

தன்னைக் காணவரும் பலரில், அவ்வப்போது, 40 ஆண்டுகள் அமேசான் காடுகளில் பணியாற்றிவரும் அருள் பணியாளரையும், 30 ஆண்டுகளுக்கு மேல், ஆப்ரிக்காவின் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவரும் அருள் சகோதரியையும் காணும்போது, பணியாற்றுவதன் முழுப்பொருளை, தன்னால் உணரமுடிகிறது என்று திருத்தந்தை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

பணியாற்றுவதற்குப் பதிலாக, தங்களை உயர்த்திக்கொள்ளும் நோக்கம் கொண்ட அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் பார்க்கும்போது, மனம் வேதனைப்படுகிறது என்பதையும், திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

தன் தனிப்பட்ட சுகங்களைத் தேடாமல், இயேசுவின் நற்செய்தியைப் பரப்பும் ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்த திருத்தூதர் பவுலைப் போல நாமும் இறைவனுக்கு முழுமனதுடன் பணியாற்றும் அருளை வேண்டுவோம் என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.