2015-11-06 16:10:00

சென்னை மெட்ரோ இரயில் பொறியாளருக்கு இங்கிலாந்து விருது


நவ.06,2015. சென்னை மெட்ரோ இரயில் கழகப் பொறியாளர் சித்திரபுத்திரன் கண்ணன் அவர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை செயல்படுத்தியதற்காக 2015ம் ஆண்டுக்கான க்ரீன் ஆப்பிள் விருதை (Green Apple Award) லண்டனில் பெற உள்ளார். 

சென்னை மெட்ரோ இரயில் கழகத்தின் செயல்திட்ட பொறியாளரான கண்ணன் அவர்கள், லண்டனில் க்ரீன் ஆப்பிள் விருதைப் பெறும் விழா, வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில், பாராளுமன்ற அவையில் நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கண்ணன் அவர்கள், 21 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புதுடில்லி மெட்ரோ இரயில் பணியிலும் இவர் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், உலக பாதுகாப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்கான சாதனை விருதைப் பெற்றுத் திரும்பியுள்ள கண்ணன் அவர்கள், விருதுகளை விட, சென்னை மெட்ரோ இரயில் செயல்திட்டம்தான் தன்னை அதிகம் பெருமைப்படுத்துகிறது என்று கூறினார்.

சுற்றுப்புறச் சூழலில் கவனிக்கத்தக்க நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, 1994ம் ஆண்டு முதல், க்ரீன் ஆப்பிள் விருது வழங்கப்படுகிறது. 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.