2015-11-05 14:01:00

திருத்தந்தை : ஒதுக்குவது அல்ல, வரவேற்பதே கிறிஸ்தவர்களின் பணி


நவ.,05,2015. மீட்பின் மூலம் அனைவரையும் ஒன்றிணைத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட இயேசுவின் பாதையை பின்பற்றும் கிறிஸ்தவர்கள், மற்றவர்களை ஒதுக்கி வைப்பவர்களாக இல்லாமல், அனைவரையும் அணைப்பவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘நாங்கள் சட்டங்களைப் பின்பற்றுகிறோம், மற்றவர்கள் பாவிகள்’ என மக்களை ஒதுக்கி வைக்கும் போக்கை பரிசேயர்கள் கொண்டிருந்த வேளையில், இயேசுவோ, அனைவரையும் வரவேற்பவராக இருந்தார், என இவ்வியாழனன்று, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களை ஒதுக்கி, புறந்தள்ளி வைப்பதே, போர்களுக்கும் மோதல்களுக்கும் இட்டுச் செல்கின்றது என்றார்.

அனைவரையும் அணைத்துக்கொள்ளும் இயேசுவின் அணுகுமுறை, எதிர்ப்பை சம்பாதித்தது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வழிதவறிய ஆடு, காணாமல்போன காசு என்ற இயேசுவின் இரு உவமைகள் தரும் பாடத்தையும் எடுத்துரைத்தார்.

தாங்கள் இழந்ததை கண்டடைவதற்கு, ஆட்டிடையரும், காசைத் தொலைத்த பெண்ணும் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அவை கிடைத்தபோது அவர்கள் இருவரும் அடைந்த மகிழ்ச்சியையும் குறித்து தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பலவீனங்களாலும், பகை உணர்வுகளாலும், பொறாமையாலும், பாவங்களாலும் மற்றவர்களை ஒதுக்கிவைப்பதே எப்போதும் போருக்கு இட்டுச் செல்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்கள் மீது தீர்ப்பிட்டு ஒதுக்கி வைக்காமல், எப்போதும் திறந்த மனதுடையவர்களாக செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.