2015-11-05 14:32:00

தந்தத்தால் செய்யப்பட்ட உருவங்களுக்கு தடை - பிலிப்பின்ஸ் ஆயர்


நவ.05,2015. தந்தத்தால் செய்யப்பட்டுள்ள உருவங்களை, வழிபாடுகளில் பயன்படுத்தவோ, அவற்றை மக்கள் கொண்டுவரும்போது அவற்றை அர்ச்சிக்கவோ வேண்டாம் என்ற எச்சரிக்கையை, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பின் எதிரொலியாக, தந்தங்களுக்காக  யானைகள் வேட்டையாடப்படும் கொடுமையைத் தடுக்க பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி இதுவென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

படைப்புக்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்றும், இந்தத் தொடர்பு, மூவொரு இறைவனிடம் விளங்கும் உறவில் பங்கு பெறுகின்றது என்றும் திருத்தந்தை தன் திருமடலில் கூறியிருப்பதை, பேராயர் வியேகாஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சுயநல சுறாமீன்களாகச் செயலாற்றும் வர்த்தகர்கள், கடல்வாழ் உயிரினங்களையும், காட்டு மிருகங்களையும் கட்டுப்பாடின்றி அழித்து வருவதை நிறுத்த, கத்தோலிக்கத் திருஅவை தனது பங்கை ஆற்றவேண்டும் என்று, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில், சட்டத்திற்குப் புறம்பாக, யானை தந்தங்களை கடத்திவரும் ஒன்பது நாடுகளில், பிலிப்பின்ஸ் நாடும் ஒன்று என்று, UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.