2015-11-05 14:25:00

காரித்தாஸ் பணிகளால் மக்களிடையே நல்ல மாற்றங்கள் உருவாகியுள்ளன


நவ.05,2015. பிரிட்டனில் இயங்கிவரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் மற்றும் ஏனைய பிறரன்பு அமைப்புக்களின் பணிகளால் மக்களிடையே பல்வேறு நேர்மறையான மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று, இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

காரித்தாஸ் சமுதாயப் பணி ஒருங்கிணைப்பு என்ற அமைப்பின் ஐந்தாவது ஆண்டு அறிக்கையை, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இப்புதனன்று சமர்ப்பித்த Westminster பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் கத்தோலிக்கப் பணிகள் தாக்கங்களை உருவாக்கி வந்துள்ளன என்று கூறினார்.

அண்மைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளை அதிகம் பாதித்துவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனையில், கத்தோலிக்கப் பங்குதளங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் போற்றுதற்குரியன என்பதை சிறப்பாகக் குறிப்பிட்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மக்களின் தாராள குணத்தைப் பாராட்டினார்.

இங்கிலாந்தில் பணியாற்றிவரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் கழகம், பிரான்ஸ் நாட்டின் காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து, புலம்பெயர்ந்தோர் நடுவே பல்வேறு துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் தான் கலந்துகொண்டதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், சமுதாயத்தில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் புலம்பெயர்தல் ஆகிய பிரச்சனைகள், எவ்விதம் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்பதையும் விளக்கிக் கூறினார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.