2015-11-04 15:54:00

வன்முறைகளைக் கண்டித்து, கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை


நவ.04,2015. சிறுபான்மையினருக்கு எதிராக, இந்தியாவில், இந்து அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொண்டுவரும்  வன்முறைகளைக் கண்டித்து, 100க்கும் அதிகமான கிறிஸ்தவத் தலைவர்களும், சமுதாய, மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எவ்வித பயமும், பிறருடைய அச்சுறுத்தலும் இன்றி வாழும் அடிப்படை உரிமை இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் உள்ளது என்று கூறும் இந்த அறிக்கையில், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் என்று பலரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் மத்திய அரசு எவ்வித பதிலும் சொல்லாமல் இருப்பதால், இத்தகைய வன்முறைகள் வளர்கின்றன என்று, இந்த அறிக்கையை உருவாக்கிய, இயேசு சபை அருள் பணியாளர், ஸ்டானி செபமாலை (Jesuit Father Stanislaus Jebamalai) அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

டில்லியில் இயங்கிவரும் இந்திய சமுதாய நிறுவனத்தின் தலைவர், அருள்பணி செபமாலை அவர்கள், வேறு ஏதோ ஓரிடத்தில் வன்முறை நிகழ்கிறது என்று வாளாவிருந்தால், விரைவில் அந்த வன்முறை நம்மையே தாக்கும் என்று எடுத்துரைத்தார்.

நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ஆட்சி செய்யும் அரசு, இந்தியாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு, குறிப்பாக, பத்திரிகையாளர்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ள வன்முறைகளுக்கு, தகுந்த பதில் தராததையடுத்து, எழுத்துத் துறையில் இந்திய அரசிடமிருந்து விருதுபெற்ற 41 பேர், தங்கள் விருதுகளை திருப்பித் தந்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.