2015-11-04 14:58:00

மறைக்கல்வி உரை – மன்னிப்பு, குடும்பங்களில் கற்கப்படுகிறது


நவ.,04,2015.  நவம்பர் மாதம் என்றால் உரோம் நகரில் வழக்கமாக குளிர் காலம் ஆரம்பித்துவிடும். ஆனால், உலகம் முழுவதும் அண்மைக் காலங்களில் வெப்பம் அதிகரித்து வருகின்ற சூழலில், உரோமிலும், இந்த மாதத்திற்குரிய வழக்கமான குளிரின்றி, இதமான சூட்டுடன் காலநிலை இருந்ததால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையும், தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. திருப்பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என மக்கள் கூட்டம் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, 'எங்கள் பாவங்களை மன்னித்தருளும்' என இயேசு கற்பித்த 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தின் வார்த்தைகளை மையமாக வைத்து தன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பத்தின் அழைப்பு மற்றும் பணி குறித்து அண்மையில் வத்திக்கானில் கூடி விவாதித்த ஆயர்கள் மாமன்றத்தின் பின்னணியில், இன்று நாம், குடும்பத்தில் மன்னிப்பின் இடம் குறித்து சிந்திப்போம். மன்னிப்பின் மதிப்பை நாம் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்ற வகையில், குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து சிந்திப்பது சிறப்பு. ஒவ்வொரு நாளும் நாம், 'வானகத்திலுள்ள எங்கள் தந்தாய்' என்ற செபத்தின் வார்த்தைகளில், இறைவனிடம் நமக்கான மன்னிப்பை வேண்டுவதோடு, மற்றவர்களை மன்னிப்பதற்குத் தேவையான அருளை வழங்குமாறும் கேட்கிறோம். கடினமான ஒன்றாக இருக்கும் மன்னிப்பு என்பது, நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும், நம்முடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளும் திறமைக்கும், உடைந்த உறவுகளை சரி செய்வதற்கும்  இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த நற்குணத்தை நாம் முதன் முதலில் குடும்பத்தில்தான் கற்றுக்கொள்கிறோம். மன்னிப்பு, குடும்பங்களை பலப்படுத்துவதுடன், அதன்வழியாக சமூகத்தை, முழுமையான வகையில், அன்பு நிறைந்ததாகவும், மனிதாபிமானம் நிறைந்ததாகவும், மாற்ற உதவுகிறது. மன்னிப்பு என்பது, நம் வாழ்வை கட்டியெழுப்ப அடித்தளமாக இருக்கும் உறுதியான பாறை மட்டுமல்ல, நம் கிறிஸ்தவ சீடத்துவம் மற்றும் இறைவிருப்பத்திற்கு பணிதலின் திறன் மிக்க, உன்னத அடையாளம். வரவிருக்கும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு, உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள், மன்னிப்பின் வல்லமையை மீண்டும் கண்டுகொள்ள ஊக்கமளிப்பதாகவும்,  இந்த உலகில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இறைவனின் ஒப்புரவை வழங்கும், அன்பின் வல்லமையை பறைசாற்ற திருஅவை எனும் உயரிய குடும்பத்திற்கு உதவுவதாகவும் இருப்பதாக.

இவ்வாறு, தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்னதை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.