2015-11-04 15:51:00

திருத்தந்தையின் வருகை, புதிய சக்தி தரும் – பாங்குயி பேராயர்


நவ.04,2015. அன்பும், உடன்பிறந்தோர் உணர்வும் அதிகம் உள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசை மீண்டும் கட்டியெழுப்பும் அழைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தருகிறார் என்று, பாங்குயி (Bangui) உயர் மறைமாவட்டப் பேராயர், Dieudonne Nzapalainga அவர்கள் கூறினார்.

கடந்த ஞாயிறு மூவேளை செப உரையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாங்குயி பேராலயத்தின் புனிதக் கதவுகளைத் திறந்து, அந்நாட்டில் அமைதியைக் கொணர விழைவதாகக் கூறியதைத் தொடர்ந்து, பேராயர் Nzapalainga அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலத்திருஅவை வறுமைப்பட்டது எனினும், மக்களை மையப்படுத்தி வாழும் திருத்தந்தையின் வருகை, தங்களுக்கு புதிய சக்தியைத் தரும் என்று, பேராயர் Nzapalainga அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் மீண்டும் உடன்பிறந்தோர் உறவில் இணைந்து வருவதற்கு, திருத்தந்தையின் வருகை ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையையும், பேராயர் Nzapalainga அவர்கள், எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் ஆப்ரிக்க திருத்தூதுப் பயணத்தில், நவம்பர் 29, 30 ஆகிய நாட்களில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் பயணிப்பார் என்பதும், அடுத்துவரும் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அடையாளமாக, நவம்பர் 29, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, பாங்குயி பேராலயத்தின் புனிதக் கதவுகளை திருத்தந்தை திறந்துவைப்பார் என்பதும் குறிப்பிடத் தக்கன.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.