2015-11-04 15:42:00

கத்தோலிக்க அமைப்புக்கள் கடைபிடிக்கும் 'காலநிலை மாதம்'


நவ.04,2015. நவம்பர் 30ம் தேதி முதல், டிசம்பர் 11ம் தேதி முடிய பாரிஸ் மாநகரில், Cop21 என்ற பெயருடன், நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள 230க்கும் அதிகமான கத்தோலிக்க அமைப்புக்கள், நவம்பர் மாதத்தை 'காலநிலை மாதம்' என்று கடைப்பிடித்து வருகின்றன.

உலகின் பல கண்டங்களில் பணியாற்றும், கர்தினால்கள், முதுபெரும் தந்தையர், ஆயர்கள், ஆகியோர் இணைந்து, அக்டோபர் 26ம் தேதியன்று வெளியிட்ட ஒரு விண்ணப்பத்தின் எதிரொலியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.

Cop21 உலக உச்சி மாநாட்டின் வெற்றிக்கென செபங்களை எழுப்புவது 'காலநிலை மாதம்' என்ற முயற்சியின் முக்கிய நோக்கம் என்றும், இந்த செப முயற்சிகளின் உச்ச கட்டமாக, நவம்பர் 28ம் தேதி, பாரிஸ் மாநகரில் பல்சமய செப வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.

மேலும், உயர்ந்துவரும் உலக வெப்பத்தைத் தடுக்க அனைத்து நாடுகளும் சரியான முடிவுகளை இந்த உலக உச்சி மாநாட்டில் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தில் இந்த அமைப்பைச் சார்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இந்த விண்ணப்பம், மாநாட்டின் உறுப்பினர்களிடம் கொடுக்கப்படும் என்றும் இவ்வமைப்பினர் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.