2015-11-04 15:44:00

உலகில் 80 கோடிக்கும் அதிகமானோர் பட்டினியில் சிக்கியுள்ளனர்


நவ.04,2015. மில்லென்னிய இலக்குகளை அடையும் காலக் கெடுவான, 2030ம் ஆண்டுக்குள், இவ்விலக்குகளில் ஒன்றான பட்டினியை ஒழிப்பது என்ற இலக்கை எவ்விதம் நாம் அடையப்போகிறோம் என்பதில் உலக அரசுகளும் அமைப்புக்களும் நேர்மையான தேடலை மேற்கொள்ள வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. பொதுஅவை கூட்டங்களில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்றுவரும் பேராயர், பெர்னதித்தோ அவுசா அவர்கள், வேளாண்மை முன்னேற்றம், உணவு பாதுகாப்பு, ஊட்டச் சத்து ஆகியவற்றை மையக் கருத்தாகக் கொண்டு நடைபெற்ற 70வது அமர்வில், வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

பட்டினியில் வாடும் மக்களில், 21 கோடியே, 50 இலட்சம் பேர், 1990ம் ஆண்டு முதல் பட்டினியின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், வளர்ந்துவரும் 129 நாடுகளில் 55 விழுக்காட்டினர் மில்லென்னிய இலக்குகளை திருப்திகரமாக அடைந்துள்ளனர் என்பதையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஐ.நா.பொதுச் செயலர் அளித்துள்ள அறிக்கையின்படி, உலகில் இன்னும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் தொடர் பட்டினியில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் நம்மை விழிப்படையச் செய்யவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

உலகில் வீணாக்கப்படும் உணவைக் குறித்தும், இயற்கை சக்திகள் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி நினைவுறுத்தி வருகிறார் என்பதை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், தூக்கி எறியும் கலாச்சாரம் குறைந்து, பகிரும் கலாச்சாரம் வளர்ந்தால், வறுமையையும், பட்டினியையும் இவ்வுலகிலிருந்து விரட்டிவிடலாம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.