2015-11-04 14:39:00

அமைதி ஆர்வலர்கள் : 1998ல் நொபெல் அமைதி விருது பாகம் 2


நவ.04,2015. வட அயர்லாந்தைச் சேர்ந்த David Trimble, John Hume ஆகிய இரு அரசியல்வாதிகளும் 1998ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். வட அயர்லாந்தில் 1968ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டுவரை, ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற சண்டைக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கு இவ்விருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக நார்வே நொபெல் விருது குழு அச்சமயத்தில் அறிவித்தது. வட அயர்லாந்தில் சண்டையை நிறுத்தி அமைதிக்கு வித்திட்ட Good Friday ஒப்பந்தம் ஏற்பட முயற்சிகள் எடுத்தவர்களில் ஒருவரான John Hume, வட அயர்லாந்தின் Londonderryல் 1937ம் ஆண்டு சனவரி 18ம் தேதி பிறந்தார். அயர்லாந்தின் முன்னாள் அரசியல்வாதியான இவர் சமூக சனநாயக மற்றும் தொழில் கட்சியைத்(SDLP)தொடங்கியவர்களுள் ஒருவர். இக்கட்சியின் உதவித் தலைவராக 1979ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை பதவி வகித்தார். ஐரோப்பிய பாராளுமன்றத்திலும், பிரித்தானிய பாராளுமன்றத்திலும், வட அயர்லாந்து சட்டசபையிலும் உறுப்பினராக இருந்தார். அயர்லாந்தின் அண்மை அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவும், வட அயர்லாந்தில் அமைதி ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளில் ஒருவராகவும் இவர் நோக்கப்படுகிறார்.

John Hume அவர்கள், காந்தி அமைதி விருது, மார்ட்டின் லூத்தர் கிங் விருது போன்ற அமைதி விருதுகளையும் பெற்றுள்ளார். மூன்று பெரிய அமைதி விருதுகளைப் பெற்ற ஒரே மனிதர் இவராவார். அய்ரிஷ் தேசிய ஒலிபரப்பு மையம் பொது மக்களிடம் நடத்திய ஆய்வில், ஜான் ஹூயூம், 2010ல் அயர்லாந்தின் வரலாற்றில் மாபெரும் மனிதர் என்று கணிக்கப்பட்டார். 2012ல், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஹூயூமை, புனித பெரிய கிரகரி பாப்பிறை அமைப்புக்குத் தலைவராக நியமித்தார். டெரியில், அயர்லாந்து கத்தோலிக்கப் பின்னணியில் பிறந்து வளர்ந்த இவரின் தந்தையின் தாத்தா பிரஸ்பிட்டேரியன் பிரிந்த கிறிஸ்தவ சபையைச் சேர்ந்துவர். இவரது பூட்டனார் ஸ்காட்லாந்திலிருந்து அயர்லாந்து வந்து குடியேறியவர். மைனூத் புனித பாட்ரிக் கல்லூரியில் படித்தவர். அயர்லாந்தின் முக்கிய கத்தோலிக்கக் குருத்துவ மாணவர் கல்லூரியிலும், தேசிய பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார் ஜாந் ஹூயூம். அச்சமயத்தில் குருவாகவும் ஆவல்கொண்டு படித்தார். ஆனால் குருத்துவப் படிப்பை முடிக்கவில்லை. மாறாக, முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியராக தனது ஊர் திரும்பினார்.

ஜான் ஹூயூம், 1960களில்,Hugh Logue போன்ற முக்கிய நபர்களுடன் சேர்ந்து குடியுரிமை இயக்கத்தில் முக்கிய நபராக இருந்து போராடினார். வட அயர்லாந்தின் இரண்டாவது பல்கலைக்கழகம் டெரியில் நிறுவப்பட போராடித் தோற்றார். ஆயினும் இப்போராட்டத்திற்குப் பின்னர் டெரி குடியுரிமை இயக்கச் செயல்திட்டக் குழுவில்(DCAC)  முக்கிய உறுப்பினராக உயர்ந்தார். 1968ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இந்தக் குடியுரிமை இயக்கம், டெரி நகரங்கள் வழியே நடத்திய ஊர்வலமே வட அயர்லாந்தின் அப்போதைய நிலைமையை உலகினருக்குப் பறைசாற்றியது. ஐக்கிய கட்சி தலைமையிலான அரசு, பல ஆண்டுகளாக டெரியில் நடத்திய அடக்குமுறை செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதுவும் வன்முறையற்ற அமைதியான வழியில் போராட்டங்களை மேற்கொள்வதே இவ்வியக்கத்தின் திட்டமாக இருந்தது. 

ஹூயூம் அவர்கள், Derry Credit Unionஐ உருவாக்கினார். அயர்லாந்து Credit Unions கூட்டமைப்பின் தலைவராக இவரது 27வது வயதில் நியமிக்கப்பட்டார். இளம் வயதில் இந்த கூட்டமைப்பின் தலைவராகப் பணியில் இருந்தவர் என்ற புகழும் இவருக்கு உண்டு. 1960களின் தொடக்க காலத்தில் தேசியவாதக் கட்சியில் சுறுசுறுப்புடன் இவர் செயல்பட்டார். ஆனால் 1964ம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகினார். 1973ல், வட அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். வணிகத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அயர்லாந்து குடியரசு கட்சியினர் விசாரணைகள் இன்றி சிறைவைக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 1971ம் ஆண்டு அக்டோபரில், வெஸ்ட்மின்ஸ்டர் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். வட அயர்லாந்தின் சின் ஃபெயின் அமைப்பினரும், பிரித்தானிய அரசும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இருதரப்போடும் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியவர் ஜான் ஹூயூம். இந்த பேச்சுவார்த்தைகள் 1985ல் ஆங்லோ-ஐரிஷ் உடன்பாடு ஏற்பட காரணமானது. எனினும், இதைப் பெருமளவான ஐக்கிய கட்சியினர் புறக்கணித்து பெல்பாஸ்ட் நகரில் பெரிய அளவில் அமைதியான போராட்டத்தை நடத்தினர்.

ஜான் ஹூயூம் அவர்கள், வட அயர்லாந்தின் அண்மை அரசியல் முன்னேற்றங்களுக்கு மூளையாக இருந்து செயல்படுகிறார் என்று சொல்லப்படுகின்றது. ஆங்லோ-ஐரிஷ் உடன்பாடு, பெல்பாஸ்ட் உடன்பாடு ஆகியவற்றின் பின்னணியில் அதிகாரத்தைப் பகிர்ந்து செயலாற்றுவதற்கு இவர் காரணியாக இருந்து வருகிறார். ஜான் ஹூயூம் அவர்களுக்கு 1998ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதும் வழங்கப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அறிவித்தார். ஐரோப்பிய ஒருங்கிணைப்பு, உலகளாவிய வறுமைக் குறைப்பு, கடன் வங்கிகள் போன்ற விவகாரங்களில், Humeமும், அவரின் மனைவி Patம் ஈடுபட்டுள்ளனர். மைனூத்திலுள்ள அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தில் கட்டடம் ஒன்றிற்கு இவரது பெயர் அண்மையில் வைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து சிறார் பிறரன்பு திட்டத்திற்கு இவர் புரவலராக இருந்து வருகிறார். ஜான் ஹூயூம் பல விருதுகளையும், கவுரவப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.