2015-11-03 16:28:00

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து பங்களாதேஷ் ஆயர் கவலை


நவ.03,2015. பங்களாதேஷில் சனநாயக முறையில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்லாம் அடிப்படைவாதிகள் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ

பத்திரிகை வெளியீட்டாளர் தீபன் கொல்லப்பட்டது, மற்றும், இன்னொரு வெளியீட்டாளரும் மூன்று இணைய தள எழுத்தாளர்களும் தாக்கப்பட்டது குறித்து தன் கவலையையும் கண்டனைத்தையும் வெளியிட்ட பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் ஆயர் ரொசாரியோ, சுதந்திர சிந்தனையாளர்களின் பங்களிப்பு, ஒரு நாட்டின் வளர்சிக்கு இன்றியமையாத தேவை என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களை ஒழிக்க முயலும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உள்ளது என்றார்.

இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைக்கு ஆதரவளிக்காமல், தங்கள் மனச்சான்றின்படி நடப்பதற்காக, சிந்தனையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் எனவும் கவலையை வெளியிட்டார் ராஜ்ஷாஹி ஆயர் ரொசாரியோ.

இணையதளத்தில் தங்கள் சுதந்திர சிந்தனைகளை வெளியிட்டதற்காக பங்களாதேசில் இவ்வாண்டில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.