2015-11-02 15:01:00

இயேசுவின் மலைப்பொழிவு, புனிதத்துவம் மற்றும் மகிழ்வின் பாதை


நவ.02,2015. இறை இரக்கத்தின் கருவிகளாக நம்மை இறைவனின் கரங்களில் ஒப்படைக்க உதவும் அருளை வழங்கும்படி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு திருப்பலி மறையுரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று அகில உலகத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களின் திருவிழாவையும் இணைத்து, அனைத்துப் புனிதர்களின் நாளான இஞ்ஞாயிறன்று, உரோம் நகர் வெரானோ கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு வழங்கிய மலைப்பொழிவின் வார்த்தைகளை எடுத்துரைத்து, அவை, புனிதத்துவம் மற்றும் மகிழ்வின் பாதை என்றார்.

நமக்கு முன் வானகம் சென்றுள்ள புனிதர்கள், இதே பாதையைத்தான் பின்பற்றியுள்ளார்கள் எனவும் உரைத்த திருத்தந்தை, நாமும் முதலில் நம்மை பாவிகள் என ஏற்றுக்கொண்டு, புனிதர்களின் பாதையில் நடைபோடுவோம் என்றார்.

மனதின் வீண் ஆசைகளை அகற்றிவிட்டு, இறையரசிற்காகக் காத்திருப்போர், தங்கள் இதயங்களில் மகிழ்வைக் காண்பர் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்” என அனைவரும் எவ்விதங்களில் தங்கள் பலனைப் பெறுவர் என்பதையும் விளக்கிக் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.