2015-10-31 16:17:00

மனித உயிர்களை மதிப்பதிலிருந்தே மனித முன்னேற்றம் துவங்குகிறது


அக்.31,2015. மனித உயிர்களும், மனிதத்தின் அடிப்படை பண்பும் ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகி வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.அவையில் கவலை தெரிவித்தார்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை, நியூ யார்க் நகரில், அக்டோபர் 30, இவ்வேள்ளியன்று நிகழ்த்திய கூட்டத்தில், ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

முழுமையான மனித முன்னேற்றம், மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பதிலிருந்து துவங்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இந்த அடிப்படையை மறந்துவிட்டு, வேறு சில விடயங்களே முன்னேற்றத்தின் முதன்மைக் கொள்கைகளாகப் பேசப்படுவது தவறு என்று எடுத்துரைத்தார்.

மத உரிமையும், மனசாட்சியைப் பின்பற்றும் உரிமையும் அண்மையக் காலங்களில் மிக அதிகமான பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதைக் குறித்தும் பேராயர் அவுசா அவர்கள் கவலையை வெளியிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.