2015-10-28 15:32:00

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை – பிற மதங்களுடன் ஒத்துழைப்பு


அக்.,28,2015.  இப்புதன் காலை உரோம் நகர், மழையுடனேயே தன் நாளை துவக்கியது. இருப்பினும், புதன் மறைக்கல்வி உரை வேளையில் வானம் அமைதி காத்தது ஆச்சரியம்தான். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில்  முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களோடு இணைந்து செபித்தார். தான் அவர்களுக்காக எப்போதும் செபிப்பதாகவும், அவர்களும் தனக்காக செபிக்க வேண்டும் என வேண்டுவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறிது நேரம் அவர்களோடு செலவிட்ட பின், தூய பேதுரு வளாகம் வந்த திருத்தந்தை, அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளுடன் இணைந்து சிறிது நேரம் மௌனமாகச் செபித்தார். இப்புதனன்று, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் Nostra Aetate  ஏடு வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நினைவு கூரப்படுவதாக உரைத்த திருத்தந்தை, அதையொட்டி,  உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அங்கு வந்திருந்த பிற மத பிரதிநிதிகளை வாழ்த்தி வரவேற்றார். இதைத் தொடந்து, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran, மற்றும் கிறிஸ்தவ சபைகளிடையேயான உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch ஆகிய இருவரும், அனைத்து மதப் பிரதிநிதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை வெளியிட்டனர். இதன் பின்னர், Nostra Aetate  ஏடு குறித்து தன் கருத்துக்களை இப்புதன் மறைக்கல்வி உரையில் விசுவாசிகளோடு பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவமல்லாத  ஏனைய மதங்களுடன் திருஅவையின் உறவு குறித்து எடுத்துரைக்கும் Nostra Aetate  ஏடு வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டை இவ்வேளையில் நினைவு கூர்கிறோம். மற்ற மதங்களுடன் நட்புணர்வு, மற்றும் புரிந்துகொள்வதன் பணியில், கலந்துரையாடல்களுக்கு திருஅவை தன்னை திறந்ததாக செயல்படுவதன் வெளிப்பாடாகவும், ஏனைய மத பாரம்பரியங்களின் வழிவந்தவர்களை மதிப்பதன் அடையாளமாகவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இந்த ஏடு இருந்தது. இதே நோக்கத்தில், கடந்த 50 ஆண்டுகளில், பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே, மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே தொடர்ந்து காணப்பட்டு வரும் உறவு முன்னேற்றங்களுக்காக, சிறப்பான விதத்தில் இறைவனுக்கு நன்றி கூர்வோம்.  நமது இந்த மனித குலத்தின் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அனைத்து நல்மனம் கொண்டோருடன், அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. இறைவனின் கொடையாம் படைப்பின் மீது சிறப்பு அக்கறை, ஒப்புரவு, பிறரன்பு போன்ற துறைகளில், அனைத்து மதங்களிடையே, மேலும் வலுவான ஒத்துழைப்பு இடம்பெறுவதற்கு, வரவிருக்கும் இறை இரக்கத்தின் ஆண்டு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்பிக்கைக் கொள்கிறேன். மதங்களிடையே வருங்காலத்தின் நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் நாம், இறைவிருப்பத்திற்கு இயைந்தவகையில், அனைத்து ஆண்களும் பெண்டிரும் தங்களை ஒரே மனித குல குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக, வேறுபாடுகளின் மத்தியிலும், அமைதியில் ஒன்றிணைந்தவர்களாகச் செயல்பட, இறைவன் வரமருள வேண்டும் என செபிப்போம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்காக செபிக்கும்படியும் அழைப்பு விடுத்தார். பின்னர், அனைவருடனும் சிறிதுநேரம்  மௌனமாக  செபித்து, தன்  மறைக்கல்வி  உரையை  நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.