2015-10-27 14:17:00

விவிலியத் தேடல் – பெரிய விருந்து உவமை – பகுதி - 4


 

ஒரு கற்பனைக் காட்சி இது... வீட்டிலுள்ள இளைஞனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. முதலாளியின் வீட்டில் நடைபெறும் விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பு வந்ததிலிருந்து அந்த இளைஞன் பல வழிகளில் தன்னையே தயாரித்து வந்தார். என்ன உடுத்துவது, என்ன பரிசு எடுத்துச் செல்வது என்று பல தயாரிப்புக்கள். இறுதியில், விருந்துக்குக் கிளம்பும் நேரத்தில், மகனிடம் அம்மா, "அவுங்க வீட்டுக்கு விருந்துக்குப் போற... பாத்து நடந்துக்கப்பா!" என்று சொல்லி அனுப்புகிறார். விருந்து நேரத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளின்படி தன் மகன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை அந்தத் தாய் நினைவுறுத்துகிறார்.

விருந்தென்று வந்துவிட்டால், விருந்து பரிமாறுவதில், விருந்து உண்பதில் எத்தனையோ விதிமுறைகள்... பொதுவாகவே, மிகப்பெரும் செலவில், நடத்தப்படும் விருந்துகளில் உணவு உண்பதை விட, அங்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் அதிக அளவில் இருக்கும்.

ஓர் அருள் பணியாளர் என்ற முறையில், பல விருந்துகளில் பங்கேற்றுள்ளேன். சாதாரண, எளிய குடும்பங்களில் எந்தவிதச் சடங்கும் இன்றி விருந்து உண்டு, மன நிறைவோடு திரும்பியிருக்கிறேன். வசதிபடைத்தவரின் விருந்துகளில், எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது, எதை எடுப்பது, எத்தனை முறை எடுப்பது என்று கணக்குப் போடுவதிலேயே விருந்தின் பெரும்பகுதி நேரத்தைக் கழித்திருக்கிறேன். இந்த விருந்துகளிலிருந்து திரும்பியபோது, வயிறும் நிறையவில்லை, மனதும் நிறையவில்லை.

இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப் பற்றி கடந்த மூன்று விவிலியத் தேடல்களில் சிந்தித்து வருகிறோம். அந்த விருந்தின்போது இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்க வந்துள்ளோம்.

விருந்தைப்பற்றி இவ்வுலகம் சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வு செய்தால், ஓர் அடிப்படையான அம்சம் வெளிப்படும். இக்கட்டளைகள் அனைத்துமே வெளிப்புறத்தைச் சார்ந்தவை. நம் உள்ளங்களில் அகந்தை, பகைமை போன்ற உணர்வுகள் அலைமோதினாலும், விருந்து நேரத்தில் வெளிப்படையாக அவற்றைக் காட்டிக்கொள்ளாமல், 'ஜென்டில்மேன்' என்ற முகமூடி அணிந்து, விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று உலகப் பாடங்கள் சொல்லித் தருகின்றன.

இதற்கு மாறாக, இயேசு சொல்லித்தரும் பாடங்கள் அமைந்துள்ளன. லூக்கா நற்செய்தி, 14ம் பிரிவின், 7 முதல் 14 முடிய உள்ள 8 இறைச் சொற்றொடர்களில் இயேசு கூறும் விதிமுறைகளை ஆய்வுசெய்தால், அவை உள்மனநிலையைச் சார்ந்த விதிமுறைகள் என்பதை உணரலாம். இந்த விதிமுறைகளை இயேசு துணிவுடன் கூறிய அந்தச் சூழலை நினைத்துப் பார்த்தால், இயேசுவின் மீது நமக்குள்ள மதிப்பு பல மடங்கு உயரும்.

யூத விருந்துகளில், அதுவும், பரிசேயர் தலைவர் வீட்டில், ஒய்வு நாளில் நடந்த விருந்தில், பல சடங்குகள் இருந்திருக்கவேண்டும். இயேசு இவற்றையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சடங்குகளும், சாத்திர சம்பிரதாயங்களும் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை. இவ்விதம் சுதந்திரமான மனநிலையோடு வாழ்ந்தவரை, பரிசேயர் வீட்டு விருந்து கட்டிப்போட முயன்றது. "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்" என்ற வார்த்தைகள், இந்த விருந்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

இத்தகையச் சூழலில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? முடிந்தவரை அச்சூழலில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதால், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதைப் பார்த்து 'காபி' அடிக்க முயல்வேன். வித்தியாசமாக எதையும் சொல்வதற்கு, செய்வதற்குத் தயங்குவேன். இயேசு என்னைப்போன்றவர் இல்லை. அசாத்தியத் துணிச்சல் அவரிடம் இருந்தது. எனவே, பரிசேயர் தலைவர் வீட்டில், சூழ இருந்தவர்கள் அனைவரும் தன்னைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் எழுந்த வேறுபட்டக் கருத்துக்களைப் பாடங்களாகப் புகட்டினார்.

அவரது முதல் பாடம், விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது பாடம், விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்று நினைக்கத்தோன்றும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், இயேசு, ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையைத் தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச்சொன்னார் இயேசு. இதோ, இயேசு வழங்கிய முதல் பாடம்...

லூக்கா 14: 7-11

விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”

விருந்து நேரங்களில் அவரவர் தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்று இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுக்கு முற்றிலும் மாறாக, இயேசு சொல்லித்தரும் தாழ்ச்சிப் பாடம் அதிர்ச்சியைத் தருகிறது. இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனைக்காட்சி அரங்கேறும். நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர் நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்துவிடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு நான் அமர்ந்திருக்கிறேன். விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத்தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிரித்தபடியே அமர்ந்துள்ளேன். வீட்டுத்தலைவர் என்னருகே வந்து, என்னையும் வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடம் இருந்து வரவில்லை. என் மனம் உடைந்து போகிறது. இயேசு சொன்னதுபோல் கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்த என் தாழ்ச்சி, அர்த்தமில்லாமல் போகிறது.

நான் இப்போது சித்திரித்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்... ஆனால், இத்தகையத் 'தாழ்ச்சி'யை எத்தனை முறை நாம் முயற்சி செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்பது பயனளிக்கும். இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு  கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே இல்லை. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம், வெளிவேடம்! வெளிவேடமிடும் பல வரைமுறைகளைத்தான் ‘விருந்து வழிமுறைகள்’ என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காணமுடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொல்லித்தந்த பாடம், பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளியவைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்தப் பாடம் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது. செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் கணக்குகள் நிரம்பி வழியும். யாரை அழைக்கவேண்டும், யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள்... இவ்விதம்... விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும்... என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யாரைச் சந்திப்பது, யாரைக் கண்டும் காணமல் போவது... இவ்விதம் இவர்கள் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.

இப்படிப்பட்ட செயற்கைத்தனமான விருந்துகளுக்கு ஒரு மாற்றாக இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற சுவைமிக்க ஆன்ம உணவு அனைத்தையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள் இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14 

தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.