2015-10-27 15:59:00

மன்னிப்புக் கேட்கிறோம் என்ற கடிதத்தின் 50ம் ஆண்டு நிறைவு


அக்.27,2015. மன்னிக்கிறோம், மன்னிப்புக் கேட்கிறோம் என்ற தலைப்பில் போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை, போலந்து ஆயர் பேரவை இத்திங்களன்று உரோம் நகரில் சிறப்பித்தது.

2ம் வத்திக்கான் பொதுச் சங்கச் சூழலில், 1965ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி போலந்து ஆயர்கள் ஜெர்மனி ஆயர்களுக்கு எழுதிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தின் வரலாற்று மற்றும் இறையியல் கருத்துகள் குறித்த சிந்தனைகள், ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இந்நிகழ்வை முன்னிட்டு உரோம் நகரில் திருப்பலி நிறைவேற்றிய, போலந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Stanisław Gądecki அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட போலந்து ஆயர்கள் பல்வேறு நாடுகளின் ஆயர் பேரவைகளுக்கு 56 கடிதங்கள் எழுதினர் என்று கூறினார்.

போலந்தில் கத்தோலிக்கம் வேரூன்றியதன் ஆயிரமாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை அக்கடிதங்களில் அறிவித்து, போலந்திற்காகச் செபிக்குமாறு ஆயர்கள் கேட்டிருந்தனர் என்றும் கூறினார் பேராயர் Gądecki.

போலந்தின் மில்லேன்யத்தைக் கருத்தில் கொண்டு, போலந்து மற்றும் ஜெர்மன் மக்களுக்கிடையே ஒப்புரவை உருவாக்கும் நோக்கத்தில் கர்தினால்கள் Stefan Wyszyński Boleslaw Kominek ஆகியோரின் முயற்சியால் இக்கடிதம் எழுதப்பட்டது என்றும் கூறினார் பேராயர் Gądecki.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.