2015-10-27 15:03:00

Pastor Bonus விதிமுறைகள் பற்றிய திருத்தந்தையின் கடிதம்


அக்.27,2015. திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்த நடைமுறைகள் முழுமையடையும்வரை, திருப்பீடத் தலைமையகத்திற்காக வெளியிடப்பட்டுள்ள Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Pastor Bonus அப்போஸ்தலிக்க ஏட்டின் விதிமுறைகளை நினைவுபடுத்தி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு திருத்தந்தை எழுதியுள்ள கடிதம் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

சீர்திருத்தத்தை நோக்கிய தற்போதைய காலத்தில், திருப்பீடத் தலைமையகத்தில் இடங்கள் சட்ட முறைப்படி காலியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை

திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது குறித்து எழுந்துள்ள சில பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அவைகளுக்குத் தாமதமின்றி தீர்வு காண திருத்தந்தை விரும்புவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பீடத் தலைமையகத்திலும், பிற வத்திக்கான் மற்றும் திருப்பீட நிறுவனங்களிலும் பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது, தற்போதைய பணியாளர் அளவிலிருந்து மாற்றம் செய்யாமல் இடம்பெறவேண்டும், அதேநேரம், பணியாளர்களை நியமிப்பது அல்லது மாற்றுவது திருப்பீடச் செயலகத்தின் அனுமதியோடும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வத்திக்கானின் ஊதிய நிர்ணயப்படியும்  நடைபெறவேண்டும் என்றும் அக்கடிதம் கூறுகிறது.

இவ்விவகாரத்தை வத்திக்கானின் அனைத்துத் துறைகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும், Pastor Bonus அப்போஸ்தலிக்க வழிமுறை ஏட்டின் விதிமுறைகள் முழுமையாய் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கர்தினால் பரோலின் அவர்களைக் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.