2015-10-26 15:39:00

மத்திய கிழக்கில் பகைமையின் கொடூரங்கள் தூவப்படுகின்றன


அக்.,26,2015. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் மற்றும் சிரியா மக்களுக்கு, இறை இரக்கத்தின் சிறப்பு ஆண்டில், ஆறுதலும், இரக்கமும் கிட்டும் என்ற நம்பிக்கையுடன், ஆறுதல் மற்றும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டின் வார்த்தைகளைத் தெரிவிப்பதாக கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்தேய ரீதி திருஅவையின் ஆயர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் தூவப்படும் பகைமையின் கொடூரங்கள், அப்பகுதி கிறிஸ்தவர்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.

ஆபிரகாமின் பயணத்தையும் இறைவாக்கினர்களின் குரலையும் அனுபவித்துள்ள இப்பூமியில், கிறிஸ்தவ மறையின் துவக்கக் காலத்திலிருந்தே இருந்து வரும் கிறிஸ்தவர்கள், தற்போது, சித்ரவதைகளையும், மறைசாட்சிய மரணங்களையும் அனுபவித்து வருவது குறித்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல நூறு ஆண்டுகளாக அமைதியில் ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும், அதே உணர்வுடன் தொடர்ந்து வாழ உதவும் நோக்கில், ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கலைஞர்களாக கிறிஸ்தவ சபைகள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்தேய ரீதி அருள்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கம், விசுவாசிகளுக்கு வழங்க வேண்டிய சகோதர அரவணைப்பு, போன்றவை குறித்தும் கல்தேய ரீதி ஆயர்களிடம் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.