2015-10-26 16:02:00

பிறரின் பாரம்பரியங்களை மதிப்பதன்வழி, அமைதியில் வாழ முடியும்


அக்.,26,2015. நாடோடி இன மக்கள் எங்கிருந்தாலும் அவர்களை அன்புகூரும், மதிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் ஒருவர் இங்கிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் வார்த்தைகளுடன் இத்திங்களன்று, நாடோடி இன மக்களை திருப்பீடத்தில் வரவேற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மற்றும் உரோம் மறைமாவட்ட குடிபெயர்ந்தோர் அவைகளும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்து, இந்திய உதய்பூர் ஆயர் தேவ்பிரசாத் ஜான் கனாவாவும் கலந்து கொண்ட, நாடோடி இன மக்களுடன் ஆன சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடோடி இன மக்களுடன் திருஅவை, பெரும் அர்ப்பணத்துடன் செயலாற்றும் அதேவேளை, அவர்களும் திருஅவையில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்றார்.

நாடோடி இன மக்களிடையே தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டத் திருத்தந்தை, வேலை வாய்ப்புகள், கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவை இன்றி நாடோடி இன மக்கள் துன்புறுவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

ஒருவர் மற்றவரிடையே முரண்பாடின்றி ஒவ்வொருவரும் தங்கள் பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் தக்க வைத்துக்கொள்ள அனுமதித்து, மதிப்பதன்வழி, அமைதியில் அனைவரும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.