2015-10-26 14:47:00

கடுகு சிறுத்தாலும்–பயத்தால் பதவியும் பற்றிக்கொள்ளப்படுகிறது


ஓர் அரசர் அந்நிய நாட்டின் மீது போர் தொடுத்து தோற்றுப் போனார். தோல்வி அவருக்குப் பயத்தைக் கொடுத்தது. சில காலம் கழித்து அவர் மறுபடியும் படையெடுத்தார். வெற்றியும் கண்டார். வெற்றியும் அவருக்குப் பயத்தைக் கொடுத்தது. தோற்றுப்போன மன்னர் எந்த நேரத்திலும் வந்து படையெடுப்பான் என்று அஞ்சினார் அவர். இப்படி பயத்தில் வாழ்ந்து வந்த அந்த அரசர் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே ஒரு துறவியைச் சந்தித்தார். துறவியாரே, இந்த நாட்டு மன்னர் நான், உங்களுக்கு எனது உதவி எதுவும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்றார். துறவி அவரை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் சொன்னார் - நீ என்னுடைய அடிமையின் அடிமை, அப்படியிருக்க நீ எப்படி எனக்கு உதவ முடியும் என்று. அரசருக்குக் கோபம் வந்தது. ஆயினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், துறவியாரே, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு துறவி, என்னுடைய அடிமைகளில் ஒருவனிடம் நான் உதவி கேட்பது முறையாக இருக்காது என்று சொல்கிறேன் என்றார். துறவியாரே, கொஞ்சம் புரியும்படிச் சொல்லக் கூடாதா? என்று கேட்டார் அரசர். அதற்கு துறவி, என்னிடம் ஓர் அடிமை இருக்கிறான். அவன் உனக்கு முதலாளி என்றார். உங்களிடம் அடிமையாக இருப்பது யார்? என்று அரசர் மறுபடியும் கேட்க, அச்சம் என்றார் துறவி. தலைகுனிந்தார் அரசர்.

பதவியில் இருக்கிறவர்கள் பயத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பயத்தின் காரணமாகவே பதவியையும், விடாமல் பற்றிக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆம். அடிமையின் அடிமை அச்சம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.